கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு




கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு வரும் 27ஆம் தேதி தொடங்கி, ஜூலை 15ஆம் தேதி வரை நடைபெறும் என உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது



தமிழ்நாட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 2022-23ஆம் கல்வி ஆண்டில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உயர்கல்வித் துறை செயலாளர் கார்த்திகேயன் நேற்று (ஜூன் 16) வெளியிட்டார்.


வரும் 20ஆம் தேதி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு வரும் 27ஆம் தேதி தொடங்கி, ஜூலை 15ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


வெளிப்படைத்தன்மை வேண்டும்: மேலும், உயர்கல்வித் துறை வெளியிட்டுள்ள அரசாணையில், "12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே கல்லூரி மாணவர் சேர்க்கை நடைபெறும். மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு முறை கடைபிடிக்கப்பட வேண்டும். மாணவர் சேர்க்கை பணிகளும், கட்டண விவகாரங்களும் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும்.


மாணவர் சேர்க்கையை நடத்துவதற்கு பேராசிரியர்கள் குழு அமைக்கப்பட வேண்டும். கல்லூரியில் உள்ள இடங்கள் குறித்த விவரங்கள் அந்த கல்லூரியின் இணையதளத்தில் வெளியிடப்பட வேண்டும். மேலும், ஆன்லைன் விண்ணப்பத்தின்போது சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் குறித்த விவரங்களை இணையதளத்தில் தெளிவாக வெளியிடப்பட வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளன.


இலங்கை தமிழருக்கு...: ஆன்லைன் மற்றும் பதிவு கட்டணமாக அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் கல்லூரிகளில் 50 ரூபாய் வசூலிக்கப்பட வேண்டும் என்றும் ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு எந்த கட்டணமும் வசூலிக்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இலங்கைத் தமிழ் அகதிகளுக்கான சேர்க்கை முழுவதும் மெரிட் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர்களின் அடையாள அட்டையை சரிபார்த்து சேர்க்கை வழங்கிட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


ஆண்கள் கல்லூரியாக தொடங்கப்பட்டு, பின்னர் இருபாலர் பயிலும் கல்லூரியாக மாற்றப்பட்டவற்றில், 30 விழுக்காடு வரை மாணவர்களை சேர்க்கலாம் என்றும் இஸ்லாமிய பெண்களுக்கு எந்தக் கல்லூரியிலும் இடம் மறுக்கப்படக் கூடாது எனவும் திட்டவட்டமாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog