திமுக ஆட்சியிலும் தொடரும் அவலம்: குழப்பங்களின் கூடாரமா பள்ளிக் கல்வித்துறை?




ஆட்சி மாறியும் காட்சி மாறாத கதையாக பள்ளிக் கல்வித்துறையின் பல்வேறு செயல்பாடுகளால், குழப்பங்களின் கூடாரமாகத் துறை மாறிவிட்டதா என்று கேள்வி எழுந்துள்ளது.


கடந்த ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதவியேற்றுக் கொண்டார். இதற்குப் பிறகு கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் தொடர் கதையாக இருந்த, பள்ளிக் கல்வித்துறையில் அறிவிப்புகள் வெளியாவதும் அவை திரும்பப் பெறப்பட்டு, புதிய அறிவிப்புகள் வெளியாவதும் நடக்காது என்றே எதிர்பார்க்கப்பட்டது.


ஆனால், திமுக ஆட்சியிலும் இந்த அவலம் தொடர்கிறது. நாளொரு அறிவிப்பும் பொழுதொரு பின்வாங்கலுமாய் இருக்கும் பள்ளிக் கல்வித்துறையால், ஆசிரியர்களும் மாணவர்களும் பாதிக்கப்படுவதாய்க் குரல்கள் எழுகின்றன. அந்த வகையில் அண்மையில் பள்ளிக் கல்வித்துறையில் வெளியான அறிவிப்புகளும் அவற்றைத் திரும்பப் பெறுதலும், புதிய அறிவிப்புகளை வெளியிடுதலும் என்னென்ன? பார்க்கலாம்.


கல்விக் கொள்கை சர்ச்சை


பொறுப்பேற்ற பிறகு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ''தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறோம்'' என்று தெரிவித்திருந்தார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னையில் நடைபெற்ற விழாவில் பேசிய அவர், ''புதிய கல்வி கொள்கையில் உள்ள திட்டங்களில் நல்லதை மட்டும் எடுத்துக்கொள்வோம். ஒவ்வொரு திட்டத்தைச் செயல்படுத்தும்போதும் கண்ணும் கருத்துமாகச் செயல்படுத்துவோம்'' என்று தெரிவித்தது சர்ச்சைகளை ஏற்படுத்தியது.


மீண்டும் பேசிய அமைச்சர், ''மாநிலத்துக்கெனத் தனி கல்விக் கொள்கை உருவாக்கப்படும்'' என்று முதல்வர் அறிவித்துள்ளதைப் பின்பற்றுவோம் என்று அறிவித்தார்.


முகக்கவசம் கட்டாயம், இல்லை


இந்த ஆண்டு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று முதலில் தகவல் வெளியானது. எனினும் இந்தத் தகவலை மறுத்த அமைச்சர் அன்பில் மகேஸ், ''பள்ளி மாணவர்களுக்கு முகக்கவசம் கட்டாயம் இல்லை. விருப்பம் உள்ளவர்கள் அணியலாம் என்றே அறிவுறுத்தப்பட்டது. தனிமனித விருப்பத்தின்படி பாதுகாப்பு கருதி முகக்கவசம் அணியலாம்'' என்று விளக்கம் அளித்தார்.


அனைவருக்கும் தேர்ச்சி


பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட தேர்வு கால அட்டவணையில், 1 முதல் 5ஆம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு அறிவிப்பு வெளியாகவில்லை. 6 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டுமே வெளியாகி இருந்ததால் தொடக்கப் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி என்று தகவல் வெளியானது.


எனினும் இந்தத் தகவலில் உண்மையில்லை என்று மறுப்புத் தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்படாது என்று தெரிவித்தார். இந்த நிலையில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவருக்கும் அண்மையில் தேர்ச்சி வழங்கப்பட்டது.


பள்ளிகள் திறப்பு


தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் நாகர்கோவிலில் மே 18ஆம் தேதி பேட்டி அளித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ''ஜூன் 20ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதற்கு, அதிக வாய்ப்புகள் உள்ளன. விரைவில் தேதி அறிவிக்கப்படும்'' என்று தெரிவித்தார்.


10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி, ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள், மாநிலத்தில் உள்ள 10,000-க்கும் மேற்பட்ட பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகள் உள்ளிட்ட பணிகள் காரணமாக திறப்பு தள்ளிப் போவதாகத் தகவல்கள் வெளியாகின. எனினும் பள்ளிக் கல்வித்துறை தரப்பில், திட்டமிட்ட தேதியில் பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதேபோல ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன.


தேர்வுத் தேதி


கொரோனா தொற்று ஓரளவுக்குக் கட்டுக்குள் வந்ததை அடுத்து, 2021-22ஆம் கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வுகள் எப்போதும்போல் மார்ச் மாதம் நடைபெறும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் கடந்த ஆண்டில் தெரிவித்திருந்தார். எனினும் தேர்வுகள் தள்ளிப்போய் மே மாதத்தில்தான் நடைபெற்றன.


மழலையர் வகுப்புகள்


இடைநிலை ஆசிரியர்கள் பற்றாக்குறை காரணமாக, எல்கேஜி மற்றும் யூகேஜி வகுப்புகளைப் பள்ளிக் கல்வித்துறைக்கு பதிலாக சமூக நலத்துறையே தொடர்ந்து நடத்தும் என்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஓர் அறிக்கை வெளியானது. எனினும் இதற்கு ஆசிரியர்களும் கல்வியாளர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.


இதைத் தொடர்ந்து பின்வாங்கிய பள்ளிக் கல்வித்துறை, எல்கேஜி மற்றும் யூகேஜி வகுப்புகளைத் தொடர்ந்து பள்ளிக் கல்வித்துறையே நடத்தும் என்ற அறிவிப்பை வெளியிட்டது.


பொதுத்தேர்வு முடிவுகள் தேதி மாற்றம்


இந்நிலையில் இன்று 10, 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதிகளும் திடீரென மாற்றப்பட்டுள்ளன. முன்னதாக ஜூன் 17ஆம் தேதி 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளும், அதே மாதம் 23ஆம் தேதி 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளும் வெளியாவதாக இருந்தன.


இந்த நிலையில், 10 மற்றும் 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் ஒரே நாளில், ஜூன் 20ஆம் தேதி அன்று வெளியாகும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தேர்வு முடிவுகளை வெளியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன்மூலம் 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் தாமதமாகவும் 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் முன்னதாகவும் வெளியாக உள்ளன. தமிழகப் பள்ளிக் கல்வித்துறை வரலாற்றிலேயே முதல் முறையாக 2 பெரிய பொதுத்தேர்வு முடிவுகள் ஒரே நாளில் வெளியாவது அநேகமாகவே இதுவே முதல் முறை. இந்த முறை சரியானதுதான் என்று கல்வியாளர்கள் கருத்துத் தெரிவித்தாலும், இதை முன்கூட்டியே திட்டமிட்டு, தெரிவிக்காதது ஏன் என்று பெற்றோர்கள் கேள்வி எழுப்பினர்.


இத்தகைய செயல்பாடுகளால், குழப்பங்களின் கூடாரமாகப் பள்ளிக் கல்வித்துறை செயல்படுகிறதா என்று கேள்வி எழுந்துள்ளது.

Comments

Popular posts from this blog