டிஎன்பிஎஸ்சி தமிழ் வழி இடஒதுக்கீட்டில் முறைகேடு!?




டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ் வழி இட ஒதுக்கீட்டில் முறைகேடு நடப்பதாக ஆரணியில் போட்டித் தேர்வு எழுதும் மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர் .


தமிழகம் முழுவதும் கடந்த மாதம் 21 ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மை தேர்வு நடைபெற்றது . திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சுற்றுவட்டார பகுதியில் 2664 பட்டதாரிகள் 9 மையங்களில் இத்தேர்வினை எழுதினர் .


2010 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி , அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் தேர்வுகளில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே 20% இட ஓதுக்கீடு செய்யப்படும் என்று அறிவித்தார் .


மேலும் கடந்த 12 ஆண்டுகளாக தமிழ் வழியில் தேர்வு எழுதும் போட்டி தேர்வாளர்களூக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது . அந்த வகையில் அண்மையில் நடந்த தேர்வில், தமிழ் வழி இட ஒதுக்கீட்டுக்கு தகுதி பெற்றவர் என டிஎன்பிஎஸ்சியால் குறிப்பிடப்பட்ட சுமார் 75 ஆயிரம் நபர்கள் தேர்வு எழுதியுள்ளனர் .


இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் தமிழ்மொழி இட ஒதுக்கீட்டை கோரியுள்ள பட்டத்தாரிகள் கூறுகையில் , ஒரு தேர்வர் 1 ஆம் வகுப்பிலிருந்து 12 ஆம் வகுப்பு வரை பள்ளிப்படிப்பை தமிழ் வழியிலும் மேலும் முதல் பட்டப்படிப்பும் தமிழ் வழியில் படித்தால் மட்டுமே தமிழ் வழி இட ஒதுக்கீடுக்கு தகுதியுடையவர் ஆகிறார் .


ஆனால் தற்போது நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் -2 தேர்வில் 1 ஆம் வகுப்பிலிருந்து 12 வகுப்பு வரை தமிழ் வழியில் படித்து முதல் பட்டப்படிப்பை ஆங்கில வழிக் கல்வியாக படித்து மீண்டும் பட்டப்படிப்பை தொலைதூரக் கல்வியில் தமிழில் படித்த மாணவர்களுக்கு தமிழ் வழி ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பித்து தேர்வு எழுதியுள்ளனர் .


இதனால் தமிழ்வழி கல்வி படித்த தகுதியுள்ள பட்டதாரிகள் பாதிக்கப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர் . தமிழக முதலமைச்சர் மு . க . ஸ்டாலின் இதில் தலையிட்டு 2010 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதி பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டுமென்று கோரிக்கை வைக்கின்றனர் .

Comments

Popular posts from this blog