5 ஆண்டு சட்டப்படிப்புகள் : விண்ணப்பப் பதிவை துவக்கியது அம்பேத்கர் சட்ட பல்கலைக் கழகம் !!





தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்துடன் இணைந்துள்ள அனைத்து சட்ட கல்லூரிகள் மற்றும் சீர்மிகு சட்டப்பள்ளியில் பயிற்றுவிக்கப்படும் 5 ஆண்டு சட்டப்படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவை துவங்கியுள்ளது.


தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி, கோயமுத்தூர், திருநெல்வேலி, செங்கல்பட்டு, வேலூர், விழுப்புரம், தரும்புரி, இராமநாதபுரம், சேலம், நாமக்கல், தேனி ஆகிய நகரங்களில் உள்ள 14 அரசு சட்டக்கல்லூரிகள் மற்றும் சேலம், திண்டிவனத்தில் அமைந்திருக்கும் தனியார் சட்டக்கல்லூரிகளும் பல்கலை கழகத்தின் கட்டுப்பாட்டில் வருகின்றன. இக்கல்லூரிகளில் 5 ஆண்டு சட்டப்படிப்புகளான BA, LLB., BCom, LLB., BBA, LLB., BCA, LLB., பட்டபடிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.


இவற்றில் சீர்மிகு சட்டப் பள்ளி, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைகத்தில் 624 இடங்களும், பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்ற அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் 1,731 இடங்களும் என மொத்தம் 2,355 இடங்கள் உள்ளன.


இந்த படிப்புகளுக்கு 2022 - 23 ஆம் கல்வி ஆண்டின் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் இன்று முதல் வரும் 29-ம் தேதி வரை பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tndalu.ac.in மூலமாக விண்ணப்பிக்கலாம்.


மாணவர் சேர்க்கையானது, தகுதி தேர்வில் பெற்றுள்ள மதிப்பெண்கள் மற்றும் தமிழ்நாடு அரசின் வகுப்புவாரியான இட ஒதுக்கீட்டு முறையை பயன்படுத்தி நடத்தப்படும். விண்ணப்பிக்கும் மாணவர்கள் 10 மற்றும் 12ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தகுதி தேர்வில் முழுமையாக தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.


அரசுக்கல்லூரிகளுக்கு 45% மதிப்பெண்களும், சீர்மிகு சட்டப்பள்ளியில் சேர 70% விழுக்காட்டிற்கு குறையாது மதிப்பெண்களும் பெற்று இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் அரசுக்கல்லூரிகளுக்கு 40% மதிப்பெண்களும், சீர்மிகு சட்டப்பள்ளியில் சேர 60% விழுக்காட்டிற்கு குறையாது மதிப்பெண்கள் பெற்று இருக்க வேண்டும்.


கொரோனா தொற்று பரவல் காரணமாக மாணவர்களுக்கான கலந்தாய்வு இணையதளத்தின் வழியாக மட்டுமே நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 2020 - 21 ஆம் கல்வியாண்டு முதல் விண்ணப்பம் மற்றும் கலந்தாய்வு இணையதளம் வாயிலாக மட்டுமே நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog