மாணவர்கள், சிறுவர்கள் உளவியல் நெருக்கடி: தற்கொலைகளைத் தடுக்க என்ன செய்யவேண்டும்?





தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களில் பள்ளி மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் தனியார் பள்ளியில் கடந்த 13ஆம் தேதி காலை அப்பள்ளியில் விடுதியில் தங்கிப் படித்து வந்த 12ஆம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார்.


இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களில் திருவள்ளூர், கடலூர், சிவகாசி, விழுப்புரம், சிவகங்கை‌, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 6 மாணவர்கள் வெவ்வேறு காரணங்களுக்காக அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டனர். இதில் சில மாணவர்களின் தற்கொலைக்கான காரணம் தெரியாததால் காவல் துறை சந்தேக மரணம் என்று வழக்குப் பதிவு செய்து விசாரிக்கிறது.


ஆசிரியர்கள் பணி எதுவரை?


இதனிடையே சென்னையில் உள்ள தனியார் கல்லூரி விழாவில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மாணவர்களின் தொடர் தற்கொலை நிகழ்வு மன வேதனை அளிப்பதாக கூறினார்.


"கல்வி நிறுவனங்களை நடத்துபவர்கள் அதனைத் தொழிலாக நினைக்காமல் தொண்டாக கருத வேண்டும். மாணவர்கள் பட்டங்கள் வாங்குவதற்கு மட்டும் கல்வி நிறுவனத்திற்கு வரவில்லை. முதலில் தன்னம்பிக்கை, துணிச்சல், மன உறுதி ஆகியவற்றை அவர்களுக்கு அளிக்க வேண்டும்.


மாணவியருக்கு வாழ்வில் ரீதியாக, மன ரீதியாக, உடல் ரீதியாக தொல்லை தரக்கூடிய எத்தகைய இழி செயல் தமிழ்நாட்டில் நடந்தாலும் அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும். குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தரப்படும். எந்த சூழ்நிலையிலும் தற்கொலை எண்ணத்திற்கு மாணவர்கள், மாணவிகள் தள்ளப்படக்கூடாது.


படிப்போடு பள்ளி நிறுவனங்களில் பணி முடிந்து விடக்கூடாது. பாடம் நடத்துவதோடு ஆசிரியர்களின் பணி முடிந்து விடக்கூடாது. குழந்தைகளைப் பெற்றதோடு பெற்றோரின் பணி எப்படி முடியாமல் இருக்கிறதோ அதுபோன்ற படிப்போடு ஆசிரியர் பணி முடிந்துவிடாது. ஆசிரியராக இருந்தாலும், பெற்றோராக இருந்தாலும் மாணவர்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள். மாணவர்களும் அவர்கள் பிரச்சினைகளை, நோக்கங்களை, கனவுகளைப் பெற்றோரிடமும், ஆசிரியரிடமும் பகிர்ந்து கொள்ளவேண்டும்," என்றார் ஸ்டாலின்.


உளவியல் வல்லுநர் கூறுவது என்ன?


இந்த சூழ்நிலையில் தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது குறித்தும், எதன் தாக்கம் மாணவர்களைத் தொடர்ச்சியாக தற்கொலைக்கு தூண்டுகிறது? உளவியல் ரீதியாக மாணவர்களைத் தற்கொலை எண்ணத்தில் இருந்தும் மற்றும் மன அழுத்தத்தில் இருந்து வெளிக்கொண்டு வருவது எப்படி? என்பது உள்ளிட்ட பல கேள்விகளுக்குக் கல்வி உளவியலாளரும், தமிழ்நாடு மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினருமான முனைவர் சரண்யா ஜெயக்குமார், பிபிசி தமிழுடன் பகிர்ந்துள்ளார். அவற்றைக் கேள்வி பதில்களாக பின்வருமாறு பார்க்கலாம்.


கேள்வி - கள்ளக்குறிச்சி மாணவி மரணத்தைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களில் அடுத்தடுத்து தொடர்ச்சியாக மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். தொடர்ச்சியான தற்கொலைக்கு என்ன காரணம்?


பதில் - உளவியல் ரீதியாக இது Herd Behaviour (மந்தை நடத்தை) என்று அழைக்கப்படுகிறது. அதாவது ஒரு நிகழ்வு தொடர்ச்சியாக அடுத்தடுத்து நடக்கும்போது நானும் அதைப்போன்று செய்ய வேண்டும் என்ற மன நிலை உருவாகிறது. எடுத்துக்காட்டாகச் செய்தி ஊடங்களில் மரணம் தொடர்பாக எப்படி உயிரிழந்தார்? எவ்வாறு உயிரிழந்தார்? எந்த காரணத்திற்காக உயிரிழந்தார்? என்று அடுத்தடுத்து வரும்போது அதைப்பார்க்கும் ஒருவருக்கு தமக்கும் இறப்பதற்கான கரணம் இருக்கிறது என்று எண்ணம் தோன்றலாம். எல்லாருக்கும் அப்படித் தோன்றாது.


தனிமையில் இருப்போர், நீண்ட நாட்களாக மனதிற்குள் எதையாவது வைத்துக்கொண்டு புழுங்கிக் கொண்டிருக்கும் நபர்கள், கவனம் கோர நினைக்கும் குழந்தைகள் தம்மைக் காப்பாற்றிவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் தற்கொலைக்கு முயல்வார்கள் ஆனால் அவர்களை காப்பாற்ற முடியாமல் போய்விடும்.


சரியா தவறா என்று புரியாமல் பலர் இப்படி செய்துவிடுகின்றனர்.



அடுத்த 15-20 நாள்களுக்கு குழந்தைகள் பத்திரம்

அடுத்தடுத்து செய்திகள் ஒரே மாதிரி வரும்போது அதன் தாக்கம் இவ்வாறு அமைகிறது. இதேபோன்ற நிகழ்வு வடஇந்தியாவில் நடந்திருக்கிறது. ஒரு தற்கொலை நிகழ்வு நடந்த பிறகு அதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்து அடுத்து தற்கொலைகள் நடந்துள்ளன. அதே போன்ற ஒரு தொடர்ச்சியான நிகழ்வாகத்தான் இதை நான் பார்க்கிறேன்.


தற்போதுள்ள சூழ்நிலையில், அடுத்து வரக்கூடிய 15-20 நாட்களுக்கு குழந்தைகளைக் கவனமாக பார்த்துக்கொள்வது மிக மிக அவசியம். அதை பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.


கேள்வி - குழந்தைகள் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டிருந்தால் எப்படி கண்டறிவது? அவர்களை எவ்வாறு அணுகுவது?


பதில் - தனிமையில் இருக்கக்கூடிய குழந்தைகளைக் கவனிக்க வேண்டும். மனச்சோர்வு என்பது சோகமாக இருப்பது மட்டுமில்லை. சிரித்த முகத்தோடு இருப்பார்கள் ஆனால் அவர்களது மனதிற்குள் எதாவது ஒன்றினால் புழுங்கிக் கொண்டிருப்பார்கள். சிரிப்பதால் அந்த குழந்தைக்கு பிரச்னை இல்லை என்று எண்ணிவிடக் கூடாது.


எந்த ஒரு குழந்தை மனம் விட்டு, வாய் விட்டுப் பேசுகிறதோ அந்த குழந்தைக்குப் பிரச்சனைகள் குறைவு. ஆனால் அதற்கு நேரெதிராக இருக்கும் குழந்தைகளுக்கு பிரச்சனை இருக்கக்கூடும். சிரிப்பார்கள், மகிழ்ச்சியாக இருப்பார்கள் ஆனால் எதை பற்றியும் பேச விருப்பப்பட மாட்டார்கள். இப்படி இருக்கும் குழந்தைகள் ஆபத்தானவர்கள்.


எப்பொழுதும் குழந்தைகளுக்கு என்ன வேண்டும் என்று சொல்ல வேண்டுமே தவிர, என்ன செய்யக்கூடாது என சொல்லக்கூடாது. நிறைய நேரங்கங்களில் குழந்தைகளிடம் வீடியோ கேம் விளையாடாதே, நண்பர்களுடன் வெளியே போகாதே என்று தான் சொல்கிறோமே தவிர அதற்கு மாற்றாக என்ன செய்யவேண்டும் என்று சொல்லத் தவறுகிறோம்.


நண்பர்களுடன் வெளியே செல்வதற்கு மாற்று நான்கு மணி நேரம் வீட்டிலிருந்து படிப்பது கிடையாது. அவர்களால் செய்யக்கூடிய விஷயத்தை அதற்கு மாற்றாக கொடுக்கும்போது நாம் சொல்வதை அவர்களால் கேட்க முடியும். இல்லையென்றால் அது அவர்களுக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தும்.


தற்போதுள்ள குழந்தைகள் அதிகமாக மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். சின்ன சின்ன விஷயங்களுக்கு பெரிய பெரிய முடிவுகளை எடுக்கின்றனர். 'இந்த காரணத்திற்காக இறந்து போகலாம் என்று சொல்வதற்கு இந்த உலகத்தில் ஒரு காரணம் கூட இல்லை'.


கேள்வி - வகுப்பில் மன உளைச்சலில் இருக்கும் குழந்தைகளை ஆசிரியர்கள் கையாள்வது எப்படி?


பதில் - ஆசிரியர்களைப் பொறுத்தவரை அடுத்து சில நாட்களுக்கு எந்த பிரச்சனை இருந்தாலும் மாணவர்களை அதட்டாமல் இருக்க வேண்டும். குழந்தைகள் மனதில் என்ன இருக்கிறது என்பது தெரியாது. அவர்களை தோழமையுடன் கையாள்வதே சிறந்தது.


இப்போதுதான் கொரோனா ஊரடங்கு எல்லாம் கடந்து வந்திருக்கிறார்கள். இதனால் பழையபடி வழக்கமான வகுப்பு நடத்தும் முறையே இப்போதுதான் தொடங்கியுள்ளது. கடந்த மாதம் பள்ளிகள் தொடங்கியவுடன் அவர்களுக்குப் படிப்பை ஆசிரியர்கள் திணிக்கவில்லை. அதாவது இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மாணவர்கள் பள்ளிக்கூடம் வந்துள்ளனர் என்பதை ஆசிரியர்கள் புரிந்திருக்கின்றனர். ஆகவேதான் அனைத்து பள்ளிக்கூடங்களும் விளையாட்டுகளை தொடங்கியுள்ளன.


சித்தரிப்புப் படம். மன அழுத்தத்தில் உள்ள சிறுவர்.

ஆனால் விளையாடிக்கொண்டே இருக்கவும் முடியாது. ஏதாவது சூழலில் மாணவர்களை அடுத்துவரும் தேர்வுக்கு ஆசிரியர்கள் தயார் செய்யவேண்டும். ஆகவே அடுத்து வரும் தேர்வுக்கு அனைவரும் தயாராக வேண்டும் என்று ஆசிரியர்கள் கூறும்போது மாணவர்கள் மத்தியில் ஒரு அழுத்தம் உருவாகிறது. அந்த அழுத்தத்தைக் குழந்தைகளால் தாங்கிக்கொள்ள முடியாது. ஆகவே அவற்றை தவிர்க்க வேண்டும்.


தேவையற்ற அறிவுரையைக் குழந்தைகளுக்குக் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். முக்கியமாகப் படிப்பு விஷயத்தில் அவர்களுக்குப் பயம் ஏற்படுத்த வேண்டாம். அதிகமாக எதிர்பார்ப்பை அவர்கள் மீது திணிக்க வேண்டாம்.


கேள்வி - விருத்தாசலத்தில் மாணவி ஒருவர் தன்னால் படிக்க முடியவில்லை என்று பெற்றோர் கொடுத்த அழுத்தத்தால் தீவிர முடிவு எடுத்த மாணவர் குறித்து...


பதில் - 12ஆம் வகுப்பு படிக்கும் மகளை இதற்குமேல் உன்னால் ஐஏஎஸ் ஆகா முடியாது என்று பெற்றோர் கூறுகின்றனர். 12ஆம் மாணவியிடம் எதற்கு ஐஏஎஸ் தேர்வைத் திணிக்கிறார்கள்? அந்த மாணவி 12ஆம் படிக்கிறார் என்றால் அந்த வகுப்பில் கவனம் செலுத்துவதற்கான ஊக்கத்தை மட்டுமே அளிக்க வேண்டும். அவர்களது குழந்தையால் என்ன முடியும் என்பதைப் பெற்றோர் முதலில் உணர வேண்டும். நாம் செய்ய நினைத்ததை குழந்தைகள் மீது திணிப்பது மிகவும் தவறானது. இது போன்ற அழுத்தத்தைக் குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாது.


குழந்தைகளின் தப்பான பழக்க வழக்கத்திற்குப் பெற்றோர் திட்டுவது தவறல்ல. ஆனால் மதிப்பெண் குறைந்தாலோ, முதல் இடத்திற்கு ஏன் வரவில்லை என்றாலோ அவர்கள் செயல்திறனைக் சுட்டிக் காட்டி, குறைகூறி குழந்தைகளை எப்போதும் திட்டக்கூடாது.


கேள்வி - மாணவர்கள் தங்களை மன அழுத்தத்தில் இருந்து வெளிக்கொண்டுவர என்ன செய்யவேண்டும்?


பதில் - குழந்தைகளும் அவர்களது சின்ன சின்ன பிரச்சனைகளைப் பெற்றோரிடத்தில் கூறி தீர்வு காணலாம்.


எப்போதும் ஒரு குழந்தைக்கு அவர்களைச் சுற்றியிருக்கும் நட்பு சூழல் சிறப்பாக இருந்தால் அந்த குழந்தை தவறான முடிவெடுக்காது. இப்போதெல்லாம் குழந்தைகளுக்குள்ளேயே பாகுபாடு பார்க்கிறார்கள், அவர்களுக்குள் சின்ன சின்ன அரசியல் உள்ளது. எல்லாரும் சேர்ந்து ஒரு குழந்தையை ஓரங்கட்டுவது, தனிமைப் படுத்துவது, பிறர் அந்த குழந்தையிடம் பேசினால் அவர்களையும் ஒதுக்கி வைப்பது, இந்த மாதிரியான குழுவாக செயல்படும் நடவடிக்கையில் குழந்தைகள் ஈடுபடக்கூடாது.


எல்லாரையும் நண்பர்களாக பார்க்கவேண்டும், எல்லாரையும் எல்லாவற்றிலும் சேர்த்துக்கொள்ள வேண்டும். யாரிடமும் பாகுபாடு மட்டும் வேண்டாம். நெருங்கிய நண்பர்கள், நண்பர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். ஆனால் எதிரி என்று கூறி யாரையும் ஒதுக்காதீர்கள்.


ஒரு வகுப்பில் அனைத்து மாணவர்களும் ஒற்றுமையாக இருந்தால், அந்த வகுப்பில் தற்கொலை என்ற எண்ணம் யாருக்குமே வாராது. ஒரு குழந்தை தனியாக இருந்தால், ஏன் தனியாக இருக்கிறாய் எங்களுடன் அமர்ந்து சாப்பிடு என்று சொல்வதற்கு எவ்வளவு நேரமாகிவிடும்? ஆனால் குழந்தைகளுக்கு இந்த பெருந்தன்மை வருவதில்லை. அவற்றை வரவைக்க நாம் உதவலாம்.


உதவும் உள்ளங்கள்


ஆதரவுக் கரம்.

தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் 'சம்வேதன' இலவச அழைப்பு(samvedna toll free number) தொலைபேசி எண் 1800-121-2830 உள்ளது அல்லது குழந்தைகள் உதவி எண் 1098(Child helpline) எண்ணிற்குத் தொடர்பு கொண்டு தங்களது பிரச்சனைகளைக் குழந்தைகள் கூறலாம். அல்லது யாருக்கும் தெரிய வேண்டாம் எனக்கு நெருங்கியவர்களுக்கு மட்டும் தெரிந்தால் போதுமென்று தோன்றினால் அவர்களிடம் சொல்லுங்கள்.


எந்த காரணமாக இருந்தாலும் இருட்டறையில் தங்காமல் எழுந்து நல்ல உடையணிந்து, தெரிந்தவர்கள் அல்லது உறவினர்கள் வீட்டிற்குச் சென்று அங்கே நன்றாகப் பேசுங்கள். தனிமையில் இருக்கும்போது தேவை இல்லாத யோசனைகள் தானாக வரும். தேவை இல்லாத யோசனைகள் நம்மை அப்படியே மூழ்கடித்துவிடும். முடிந்த அளவிற்கு தனிமையில் இருந்து வெளியே வர வேண்டும்.


சூரிய ஒளிக்கு தற்கொலையை தடுக்கும் சக்தி உள்ளது. ஆகவே நம் உடம்பில் நல்ல வெயில் பட்டாலே போதும். நல்ல வெயிலில் விளையாடும்போதோ, வெளியே யாராவது வீட்டிற்கு செல்லும்போதோ நமக்கு தேவை இல்லாத எண்ணங்கள் தோன்றாது.


கேள்வி - மாணவர்கள் தற்கொலையைத் தடுக்க மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சார்பாக அரசிடம் பரிந்துரை செய்தது என்ன?


பதில் - தமிழக அரசிடம் எங்கள் தரப்பில் வலியுறுத்துவது தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும் உளவியல் ஆலோசகர் நியமிக்கப்பட வேண்டும் என்பது. தற்போது அவ்வளவு உளவியல் ஆலோசகர்கள் இல்லை என்றால் இப்போது இருப்பவர்களை பணியமர்த்திவிட்டு. அடுத்தடுத்து கல்லூரி முடித்துவரும் நபர்களை இந்த பணிக்கு நியமிக்கலாம். ஆகவே ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும் உளவியல் ஆலோசகர் அவசியம் ஒருவர் இருக்க வேண்டும்.


கேள்வி - ஒவ்வொரு தமிழ்நாடு அரசுப் பள்ளியிலுமும் மாணவர் மனசு பெட்டி என ஒன்று வைக்கப்படவுள்ளது குறித்து...


பதில் - இந்த பெட்டியின் முக்கிய நோக்கம் மாணவிகளுக்கு எதிரான பாலியல் ரீதியான குற்றங்களைத் தடுப்பது. ஆனால், எல்லாத் தரப்பு மாணவர்களின் பள்ளி தொடர்பான பிரச்சனைகளுக்கும் தீர்வு காண இது உதவும். ஆனால் மாணவர் மனசு பெட்டியில் மாணவர்கள் பிரச்சினைகளை தெரிவிக்கும்போது அங்கே அவர்களுக்கு ஆலோசனை வழங்குவது யார்?


அந்த இடத்தில் உளவியல் ஆலோசகர் தேவைப்படுகிறார். சில பள்ளி முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மாணவர்கள் பிரச்னையை தாயுள்ளம் கொண்டு சரி செய்கிறார்கள். ஆனால் இரண்டு சதவீத ஆசிரியர்கள் மட்டுமே அவ்வாறு இருக்கின்றனர். 98 சதவீத ஆசிரியர்களுக்கு கல்வி உளவியல் அவர்கள் படித்த படிப்பில் ஒரு பாடமாக மட்டுமே உள்ளது. முழுமையாக உளவியல் படித்தவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.


"ஒவ்வொரு பள்ளியிலும் ஓர் உளவியல் ஆலோசகரை அரசு நியமிக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் எங்களிடம் பள்ளி ஆசிரியரை அனுப்புங்கள் நங்கள் அவர்களை உளவியல் ஆலோசகராக மாற்றித் தருருகிறோம்" என்கிறார் சரண்யா ஜெயக்குமார்.


"இதுவரை நாங்கள் பார்த்த நிகழ்வுகளின் அடிப்படையில் எங்கள் தரப்பில் இருந்து தமிழக அரசுக்கு சில பரிந்துரைகளை அனுப்பியுள்ளோம். தற்போது அரசின் பதிலுக்காக காத்திருக்கிறோம். இவை அடுத்த பத்து நாட்களில் நடைமுறைக்கு வந்து அப்படியே போய்விடக் கூடாது. நாங்கள் இந்த விஷயத்தில் முடிவுகளைப் பார்க்க விரும்புகிறோம், அதற்காக காத்திருக்கிறோம்," என்று அவர் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog