தற்காலிக ஆசிரியர் பணி நியமனம் என்பது உழைப்பு சுரண்டல் - கல்வியாளர்கள் கருத்து!





தற்காலிக ஆசிரியர் பணி நியமனம் என்பது உழைப்பு சுரண்டல் என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை தொடர்ந்து நிலவி வருவதால், மாணவர்களின் கல்வி பாதிக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு, கற்பிக்கும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியில் 2,559 இடங்கள் காலியாக இருந்தும், 152 பேர் மட்டுமே பணியில் சேர்ந்துள்ளனர்.


அதேபோல் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கான பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் 4,910 இடங்கள் காலியாக இருந்தும் 2,069 பேர் பணியில் சேர்ந்துள்ளனர். தமிழ்நாட்டில் 24 மாவட்டங்களில் காலியாக நிரப்ப இருந்த 11,825 ஆசிரியர் பணியிடங்களுக்கு 1,50,648 பேர் விண்ணப்பம் செய்திருந்தாலும், பட்டதாரி ஆசிரியர்கள் 2,069 பேரும், முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் 152 பேர் என 2,221 பேர் மட்டுமே பணியில் சேர்ந்துள்ளனர். எனவே 9,604 பணியிடங்கள் காலியாக உள்ளது.



தொகுப்பூதிய விவரம்: தொடக்கப்பள்ளிகளில் காலியாக உள்ள 4,989 இடைநிலை ஆசிரியர் பணிக்கு ரூ.7,500 தொகுப்பூதியத்திலும், 5,154 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ரூ.10,000 தொகுப்பூதியத்திலும், 3,188 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் 12,000 ரூபாய் தொகுப்பூதியத்திலும் நிரப்பப்பட உள்ளது.


இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறையில் காலியாக இருந்த பணியிடங்களில் 2,069 பட்டதாரி ஆசிரியர்களும், முதுகலை ஆசிரியர்கள் 152 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையில் தொடக்கக்கல்வித் துறையில் இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.


திமுகவின் கொள்கை எது? இது குறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பேட்ரி ரெய்மாண்ட் கூறுகையில், "தற்காலிக ஆசிரியர் பணியிடங்களில் சேர்வதற்கு 2,200 ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்தப் பணிக்கு மிகக் குறைந்த அளவிலேயே விண்ணப்பித்துள்ளனர்.



ஆசிரியர் சங்கங்கள் தற்காலிக பணியில் நியமனம் செய்யக் கூடாது என தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறோம். மிகக் குறைவான ஊதியத்தில் நியமனம் செய்வது என்பது உழைப்பு சுரண்டாலாக இருக்கும் என ஆசிரியர்கள் நினைக்கின்றனர். எனவே ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களை முறையான ஊதியத்தில் நியமிக்க வேண்டும்.


தேர்வு நெருங்கும் நேரத்தில் மாணவர்களுக்கு இது சுமையாக இருந்திடக் கூடாது. திமுகவின் கொள்கையே தொகுப்பூதியத்தை ஓழிக்க வேண்டும் என்பதால், தமிழ்நாடு முதலமைச்சர் கவனம் செலுத்திட வேண்டும்" என தெரிவித்தார்.


நல்ல சம்பளம் வேண்டும்: மேலும் கல்வியாளர் சீனிவாச சம்பந்தம், "அரசுப்பள்ளிகளில் 12,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கிறது. கரோனாவால் தனியார் பள்ளியில் படித்த மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் வந்து சேர்கின்றனர். இதற்குக் காரணம் அரசுப் பள்ளிகளில் தரமான கல்வி அளிக்கப்படும் என்ற நம்பிக்கையும், கல்வியின் தரத்தை அரசு உயர்த்த நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதும்தான்.


12,000 ஆசிரியர் காலிப்பணியிடம் இருக்கும் நிலையில், 2,200 பேர் மட்டுமே வந்து சேர்ந்துள்ளனர். 10,000 பணியிடங்கள் காலியாக இருக்கிறது. பள்ளிகள் திறந்து மாணவர்கள் வந்து விட்டனர். பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு ஆசிரியர்கள் நியமனம் இல்லாவிட்டால் கல்வி பாதிக்கும். பள்ளிக்கல்வித்துறையில் வேலை வாய்ப்புகள் இருந்தும், அவர்களுக்கு அளிக்கப்படும் சம்பளம், 10 மாதம் மட்டுமே பணி என்பதும், மாதம் 7,500 ரூபாய் தொகுப்பூதியம் என்பதும் காரணமாக இருந்து வருகிறது.


இந்த சம்பளத்தை வைத்துக்கொண்டு எதுவும் செய்ய முடியாது. மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டும் என்றால், நல்ல சம்பளத்தை கொடுத்து ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும். ஆசிரியர்களை நியமனம் செய்தால்தான், மாணவர்கள் தேர்வினை எழுதி சாதிக்க முடியும்" என கூறினார்

Comments

Popular posts from this blog