TNPSC Group 1: வெளியான குரூப் 1 முதன்மைத் தேர்வு முடிவுகள்: எப்போது நேர்காணல்? எத்தனை பேருக்கு?




தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 1 முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் தேர்வு செய்யப்படுவர்கள் ஜூலை மாதத்தில் நடைபெறும் நேர்காணல் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.



தமிழ்‌நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையம்‌ சார்பில் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப்‌ பணிகள்‌ தேர்வு - 1 (குரூப் - 1) முதன்மைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. முதன்மைத் தேர்வுக்கு 3,800 பேர் தேர்வு செய்யப்பட்ட நிலையில், நேர்காணல் தேர்வுக்கு 137 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.


துணை ஆட்சியர், காவல்துறை துணை காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி), வணிகவரி உதவி ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் உள்ளிட்ட பதவிகளில் உள்ள 66 காலியிடங்களை நிரப்பும் வகையில் குரூப்-1 முதல்நிலைத் தேர்வு கடந்த ஜனவரி மாதம் 3-ம் தேதி நடத்தப்பட்டது. டிஎன்பிஎஸ்சி நடத்திய இந்தத் தேர்வை, மாநிலம் முழுவதும் 1 லட்சத்து 31 ஆயிரத்து 701 பேர் எழுதினர். இதில் முதன்மைத் தேர்வுக்கு 3,704 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.


கொரோனா பெருந்தொற்றால் தள்ளிப்போன தேர்வு


இவர்களுக்கான முதன்மைத் தேர்வு மே 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. எனினும் கொரோனா பெருந்தொற்று காரணமாகத் தேர்வுகள் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன. பின்னர் 2022 மார்ச் 4, 5, 6 ஆகிய தேதிகளில் முதன்மைத் தேர்வு நடைபெற்றது. அவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று (ஜூன் 29) வெளியாகி உள்ளன. இதில் 137 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


அவர்களுக்கு நேர்காணல் தேர்வு ஜூலை 13, 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் இருந்து 66 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். முன்னதாக வயது, கல்வித் தகுதி, சாதி, தேவையானோருக்கு மாற்றுத் திறனாளி சான்றிதழ், தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ் ஆகியவை பரிசோதிக்கப்படும். அவற்றில் தவறு கண்டுபிடிக்கப்பட்டால், நேர்காணலில் கலந்துகொள்ள முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog