TNPSC : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான உத்தேச விடைகள் வெளியானது




குரூப் 4 எழுத்துத் தேர்வுக்கான உத்தேச விடைகளை டிஎன்பிஎஸ்சி (TNPSC) வெளியிட்டுள்ளது. தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இருந்து தேர்வர்கள் இதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


டிஎன்பிஎஸ்சி குரூப் 4 (TNPSC Group 4) பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஜுலை 24ம் தேதி நடைபெற்றது. 22 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் 7,000க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.


இந்நிலையில், இந்த எழுத்துத் தேர்வுக்கான உத்தேச விடைகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இந்த, உத்தேச விடைகளில் ஏதேனும் தவறு உள்ளது என்று கருதினால், விண்ணப்பதாரர் மேல்முறையீடு செய்யலாம்.


வரும் ஆகஸ்ட்8ம் தேதி மாலை 5.45 மணிக்குள் தேர்வாணைய இணையதளத்தில் உள்ள 'Answer Key Challenge' என்ற சாளரத்தைப் பயன்படுத்தி முறையீடு செய்ய வேண்டும். அதன்பின், இச்சேவை முற்றிலும் நிறுத்தப்படும். ஒருவர் எத்தனை கேள்விகளையும் மறுக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இருப்பினும், தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் மட்டுமே இந்த வசதியை கோர முடியும்.


சரியான விடையைக் கோர விரும்பும் விண்ணப்பதாரர், டிஎன்பிஎஸ்சி இணையத்தளத்தில் தனது பதிவெண், விண்ணப்ப எண், பிறந்த தேதி, தேர்வு பாடத்தின் பெயர், வினா எண் உள்ளிட்ட விவரங்களை அளிக்க வேண்டும்.


மேலும், உத்தேச விடைகளை மறுத்து தாங்கள் சுட்டிக் காட்டும் சரியான விடைக்கான/விடைகளுக்கான ஆதாரமாக இருக்கும் புத்தகத்தின் விவரங்களை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும்.


அனைத்து கோரிக்கைகளும் ஆன்லைன் மூலமாக மட்டுமே பெறப்படும் என்றும் அஞ்சல் வழியாகவோ, மின்னஞ்சல் வழியாகவோ பெறப்படாது என்று டிஎன்பிஎஸ்சி தெளிவுபடுத்தியுள்ளது.

Comments

Popular posts from this blog