கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கூடுதல் இடங்கள் ஒதுக்கீடு 24 ஆயிரம் இடங்கள் அதிகரிப்பு: இடம் கிடைக்காமல் காத்திருக்கும் மாணவர்களுக்கு நல் வாய்ப்பு




கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கூடுதல் இடங்கள் ஒதுக்கீடு செய்த காரணத்தினால் 24 ஆயிரம் இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.



தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கடந்த சில ஆண்டுகளாக மாணவ-மாணவிகள் சேர்க்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக பி.காம், பி.ஏ. ஆங்கிலம் உள்ளிட்ட சில பாடப்பிரிவுகளுக்கு அதிக அளவில் போட்டி இருந்து வருகிறது. கடந்த ஆண்டுகளை போலவே இந்த வருடமும் கலை அறிவியல் பாடப் பிரிவுகள் மீது இருந்த மோகம் குறையவில்லை. நடப்பாண்டில் அதிக பட்சமாக 4 லட்சம் பேர் வரை விண்ணப்பித்தனர்.


தமிழகத்தில் 163 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மூலம் ஏழு லட்சத்து 10 ஆயிரம் இடங்கள் உள்ளன. 300க்கும் மேற்பட்ட தனியார் சுயநிதி கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன. ஆனால், 4 லட்சத்துக்கும் மேலான மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில் 2.98 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் தகுதியானதாக ஏற்று கொள்ளப்பட்டன. அதன் அடிப்படையில் கடந்த மாதம் கட் ஆப் மார்க் அடிப்படையில் மாணவர் சேர்க்கை தொடங்கியது.


அதிக அளவில் விண்ணப்பங்கள் வந்திருந்த காரணத்தினால் கூடுதல் இடங்கள் வழங்கக்கோரி, தமிழ்நாடு அரசுக்கு கல்லூரி நிர்வாகம் கோரிக்கையை வைத்தது. அதன் அடிப்படையில் கலை பாடப்பிரிவுகளுக்கு 20 சதவீதமும், அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு ஆய்வக வசதிக் கேற்ப 20 சதவீதமும் கூடுதலாக சேர்க்க அரசு அனுமதி அளித்துள்ளது. அதே போல் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் 15 சதவீதம் சுயநிதி கல்லூரிகளில் 10 சதவீதமும் கூடுதலாக மாணவர்களை சேர்க்க அனுமதி அளிக்கப்பட்டது.


ஒவ்வொரு கல்லூரிகளிலும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட இடங்களின் அடிப்படையில் கூடுதலாக மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். அந்த வகையில் அரசு கல்லூரிகளில் 20 சதவீதம் இடங்கள் தற்போது அதிகரிக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 24 ஆயிரம் இடங்கள் கூடுதலாக கிடைக்கும். இவை இடம் கிடைக்காமல் காத்திருந்த ஏழை மாணவர்களுக்கு நல்வாய்ப்பாக அமைந்துள்ளது.


பி.ஏ, பி.காம், பி.எஸ்.சி. போன்ற பட்ட படிப்புகளில் பல்வேறு பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பித்து கடைசி நேரத்தில் மதிப்பெண் குறைவால் சேர முடியாமல் போன மாணவ-மாணவிகளுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு இதன் மூலம் கிடைத்துள்ளது. ஏற்கனவே விண்ணப்பித்து இருந்த மாணவர்கள் கட் ஆப் மதிப்பெண்ணின் அடிப்படையில் அழைக்கப்பட்டு அவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்படும். ஒரு வேளை அந்த மாணவர்கள் வேறு கல்லூரியில் சேர்ந்து இருந்தால் அந்த வாய்ப்பு அடுத்த மாணவர்களுக்கு வழங்கப்படும் என்று உயர் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

Comments

Popular posts from this blog