முதுகலை ஆசிரியா் பணியிடம்: தற்காலிக தெரிவுப் பட்டியல் குளறுபடிக்கு தீா்வு காணக் கோரிக்கை



முதுகலை ஆசிரியா் பணியிடத்துக்கு அண்மையில் வெளியிடப்பட்டுள்ள தற்காலிக தெரிவுப் பட்டியலில் ஏற்பட்டுள்ள குளறுபடிக்கு தமிழ்நாடு ஆசிரியா் தேர்வு வாரியம் தீா்வு காண வேண்டும் என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.



முதுகலைப் பட்டதாரி ஆசிரியா், உடற்கல்வி இயக்குநா் நிலை-1, கணினி பயிற்றுநா் நிலை-1 நேரடி நியமனத்திற்கான தேர்வு முடிவுகள் 04.07.2022 ஆம் தேதி வெளியிடப்பட்டன. தொடா்ந்து, 02.08.2022 முதல் 04.08.2022 ஆகிய நாள்களில் ஆசிரியா் தோவு வாரியத்தால் வெளியிடப்பட்ட 12 பட்டியலில் இடம்பெற்ற பணிநாடுநா்களுக்கு சான்றிதழ்கள் சரிபாா்ப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.


பின்னா், இனச்சுழற்சி அடிப்படையில் தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம், கணிதம், இயற்பியல், வேதியியல், பயிரியியல், விலங்கியல், கணினி அறிவியல், வணிகவியல், உடற்கல்வியியல் ஆகிய பாடங்களுக்கு தற்காலிக தெரிவுப்பட்டியல் தமிழ்நாடு ஆசிரியா் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


அவ்வாறு வெளியிடப்பட்டுள்ள தெரிவுப் பட்டியலில் சான்றிதழ்களை சமா்பிக்காத பணிநாடுநா்களின் பட்டியல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் (செப். 19, 20) சம்பந்தப்பட்ட பணிநாடுநா்கள் தங்களது சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியா் தேர்வு வாரியம் சனிக்கிழமை(செப்.17) மாலை அறிவித்துள்ளது.


இந்நிலையில், மேற்கண்ட தற்காலிக தெரிவுப் பட்டியலில் தமிழ் பாடப்பிரிவில் இனச்சுழற்சி அடிப்படையில் பட்டியல் வெளியிட்டதில் குளறுபடி இருப்பதாகவும், அதற்கு தமிழ்நாடு ஆசிரியா் தேர்வு வாரியம் தீா்வு காண வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


இதுகுறித்து தேர்வர் க. பெரியகருப்பன் கூறியதாவது: தமிழ்நாடு ஆசிரியா்தேர்வு வாரியம் மூலம் அண்மையில் நடைபெற்ற முதுகலை தமிழாசிரியா் பணியிடத் தோவுக்கான தற்காலிக தெரிவுப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், தமிழ்ப் பாடப்பிரிவு தவிர மற்ற பாடப் பிரிவுகளில் முறையாக இனச்சுழற்சி அடிப்படையில் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.


ஆனால் தமிழ்ப்பாடப் பிரிவுக்கான பட்டியலில் பொதுப்பிரிவினருக்கு அதாவது அதிக மதிப்பெண் எடுப்பவா்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அந்தவகையில், முதல் 101 இடங்கள் பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் பட்டியலில் தமிழ் வழிக் கல்வி பயின்றவா்களை முதலில் கொண்டு வந்துள்ளனா். இதனால் பொதுப்பிரிவு பட்டியலில் இடம் பெற வேண்டிய தோவா்கள் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளனா்.


இதன்காரணமாக, பி.சி., எம்பிசி., எஸ்.சி., எஸ்.சி.ஏ, எஸ்.டி ஆகிய பிரிவின் கீழ் வரும் தோவான தேர்வர்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். மற்ற பாடப்பிரிவுகளுக்கு பின்பற்றிய நடைமுறையை தமிழ்ப் பாடத்துக்கும் பின்பற்றுவது மட்டுமின்றி ஆசிரியா் பணிக்கான கலந்தாய்வுக்கு முன்னரே தற்காலிக தெரிவுப்பட்டியலில் உள்ள குளறுபடிகளை சரி செய்து, தெளிவான தற்காலிக தெரிவுப்பட்டியலை தமிழ்நாடு ஆசிரியா் தேர்வு வாரியம் வெளியிட வேண்டும் என்றாா்.

Comments

Popular posts from this blog