ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் மத்திய அரசு பணிக்கு மாற்றம்



ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., தலைவர் லதா, மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.


இதனால், ஆசிரியர் பணி நியமனங்கள் தாமதமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.


தமிழக பள்ளிக் கல்வி துறையின் கீழ் செயல்படும், ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., வழியாக, ஆசிரியர்கள், பேராசிரியர்களை நியமிப்பதற்கான போட்டி தேர்வுகள் நடத்தப்படுகின்றன. மேலும், ஆசிரியர் பணியில் சேருவதற்கான, 'டெட்' என்ற ஆசிரியர் தகுதி தேர்வும் நடத்தப்படுகிறது.தற்போதைய நிலையில், டி.ஆர்.பி., சார்பில், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கும் பணி நடந்து வருகிறது.


அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளின், 1,056 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு, பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதிக்கான முதல் தாள், 'டெட்' தேர்வு, அடுத்த மாதம் நடத்தப்பட உள்ளது. அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில் காலியாக உள்ள, 4,000 பேராசிரியர் இடங்களை நிரப்ப, உயர் கல்வித்துறை கடிதம் அளித்துள்ளது. இந்த பணிகளும் டி.ஆர்.பி.,யால் துவங்கப்பட உள்ளன.



இந்நிலையில், டி.ஆர்.பி., தலைவராக பதவி வகித்த லதா, மத்திய அரசின் சுகாதார அமைச்சக பணிக்கு, திடீரென மாற்றப்பட்டு உள்ளார். அதனால், டி.ஆர்.பி., தலைவர் பதவி காலியாகியுள்ளது. இந்த பதவியில் யாரை நியமிப்பது என, தமிழக அரசு இன்னும் உறுதி செய்யவில்லை.

எனவே, டி.ஆர்.பி., உறுப்பினர் செயலர் பழனிசாமி தலைமையில், உறுப்பினர்கள் உமா, உஷாராணி, பேராசிரியர் அருள் அந்தோணி, கூடுதல் உறுப்பினர்கள் பொன்னையா, சுகன்யா, துணை இயக்குனர் அனிதா ஆகியோர் அடங்கிய குழு, ஆசிரியர் தேர்வு வாரிய பணிகளை கவனிக்கிறது.

Comments

Popular posts from this blog