பள்ளி தலைமையாரியர்கள் கட்டாயம் பாடம் எடுக்க வேண்டும் - புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..!




புதுச்சேரி மாநில பள்ளி கல்வித் துறை, 'தலைமை பொறுப்பில் இருந்தாலும் பள்ளி முதல்வர்கள், தலைமையாசிரியர்கள் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்த வேண்டும்' என உத்தரவு பிறப்பித்துள்ளது.


அம்மாநிலத்தில், பள்ளி கல்வித் துறையின் கீழ் 712 பள்ளிகள் இயங்கி வரும் நிலையில், இந்தப் பள்ளிகளில் 4 ஆயிரம் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.


அந்தந்த பள்ளிகளின் நிர்வாக பொறுப்புகளை, பள்ளி முதல்வர்கள், துணை முதல்வர்கள், தலைமையாசிரியர், துணை தலைமையாசிரியர், ஆரம்ப பள்ளி தலைமையாசிரியர்கள், கவனித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் பள்ளியில் தலைமை பொறுப்பினை கவனித்து வந்தாலும், அவ்வப்போது மாணவர்களுக்கு வகுப்புகளும் எடுக்க வேண்டும்.


இது குறித்து பள்ளிக் கல்வித் துறை, கடந்த 2000ம் மற்றும் 2011ம் ஆண்டில் வழிகாட்டுதல்களை பிறப்பித்தது. ஆனால், தலைமை பொறுப்பில் உள்ள ஆசிரியர்கள் இந்த வழிமுறைகளை பின்பற்றவில்லை. பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்ட நேரத்தில் கூட, வகுப்பிற்கு சென்று பாடங்களை நடத்தவில்லை.


எங்களுக்கு நிர்வாக பணி மட்டும் தான். எங்களால் வகுப்பிற்கு சென்று பாடம் நடத்த முடியாது என்று மறுத்து விடுகின்றனர்.இந்த செய்தி மற்ற ஆசிரியர்களுக்கிடையில் கடும் கோபத்தை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து, மற்ற ஆசிரியர்கள் நேரடியாக பள்ளி கல்வித் துறையிடம் 'பள்ளிக்கல்வி விதிமுறைப்படி, பள்ளி முதல்வர்கள், தலைமையாசியர்கள் பாடம் நடத்த வேண்டும். ஆனால் இவர்கள் நிர்வாகப் பணியை மட்டும் பார்க்கின்றனர்; மாணவர்களுக்கு பாடம் நடத்த மறுக்கின்றனர்' என புகார் பட்டியல் கொடுக்க ஆரம்பித்தனர்.


இப்பிரச்னை மாநிலத்தின் நான்கு திசைகளில் இருந்தும் எதிரொலித்தது. இதனையடுத்து, பள்ளிக் கல்வித் துறை தற்போது பள்ளி முதல்வர்கள், தலைமையாசிரியர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது, "தலைமை பொறுப்பில் இருந்தாலும் பள்ளி முதல்வர்கள், தலைமையாசிரியர்கள் மாணவர்களுக்கு கட்டாயம் பாடங்கள் நடத்த வேண்டும்" என மீண்டும் உத்தரவிட்டுள்ளது.


இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றிக்கை அனுப்பியுள்ளது. மேலும், பள்ளி கல்வித் துறை இயக்குனர் ருத்ரகவுடு பிறப்பித்துள்ள உத்தரவில்,


நிர்வாகப் பணிகளை காரணம் காட்டி பள்ளி முதல்வர்கள், தலைமையாசிரியர்கள் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்துவதில்லை என பள்ளிக்கல்விதுறை கவனத்திற்கு வந்துள்ளது. பள்ளி கல்வித் துறை விதிகளின்படி, பள்ளி முதல்வர்கள் வாரத்திற்கு ஆறு வகுப்புகளும், துணை முதல்வர்கள் வாரத்திற்கு 12 வகுப்புகளும் கட்டாயம் நடத்த வேண்டும்.


கிரேடு-1 தலைமையாசிரியர்கள் வாரத்திற்கு 6 வகுப்புகளும், கிரேடு-2 தலைமையாசிரியர்கள், ஆரம்ப பள்ளி தலைமையாசிரியர்கள் வாரத்திற்கு 10 வகுப்புகளை மாணவர்களுக்கு கட்டாயம் எடுக்க வேண்டும். இதனை பள்ளி வார அட்டவணையிலும் இடம் பெறச் செய்து, பாடங்களை நடத்த வேண்டும். இதனை பின்பற்றுவது குறித்து தீவிரமாக கண் காணிக்கப்படும் என்று அதில் தெரிவித்துள்ளது.


பள்ளி கல்வித் துறை வழக்கமாக சுற்றறிக்கை அனுப்பிய கையோடு அமைதியாகிவிடும். ஆனால், தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவு பள்ளிகளில் பின்பற்றப்படுகிறா? என்பதை ரகசியமாக விசாரிக்கவும், "திடீர் விசிட்" நடத்தி ஆய்வு செய்யவும் பள்ளி கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.


Comments

Popular posts from this blog