15 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளிகளில் கூடுதலாக சேர்ந்துள்ளனர் - முதல்வர் மு.க.ஸ்டாலின்



தரமான கல்வியை நமது அரசு பள்ளிகள் வழங்கிவருவதால் கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 15 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளிகளில் கூடுதலாக சேர்ந்துள்ளதாக சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


இது குறித்து சட்ட மன்றத்தில் முதல்வர் பேசியதாவது:


கடந்த ஓராண்டு காலத்தில் பள்ளி கல்வித்துறையானது மகத்தான பல திட்டங்களை முன்னெடுத்துள்ளது. இந்திய ஒன்றியத்தில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் எடுத்துக்காட்டாக  திகழும் வண்ணம் காலை உணவு திட்டம், இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் திட்டம், மாதிரிப்பள்ளிகள், நான் முதல்வன், தகைசால் பள்ளிகள் என நமது அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.


இந்த சூழலில் பள்ளிக்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துவதற்கு என அரசு பள்ளிகளுக்கு சுமார் 26,000 புதிய வகுப்பறைகளும், 7,500 கி.மீ. சுற்று சுவரும், பராமரிப்பு பணிகளுக்கு என சுமார் ரூ.2,500 கோடி நிதியும் என மொத்தம் சுமார் 12,300 கோடி தேவை என கண்டறியப்பட்டு அவற்றை படிப்படியாக ஏற்படுத்தி பெறுவதற்கு என பேராசிரியர் அன்பழகன் மேம்பாட்டுத்திட்டம் எனும் திட்டம் அறிவிக்கப்பட்டது. அத்திட்டத்தின் படி நடப்பாண்டில் சுமார் ரூ.1,430 கோடி ஒதுக்கப்பட்டு ஆயத்த வேலைகள் நடைபெற்று வருகிறது.


தரமான கல்வியை நமது அரசு பள்ளிகள் வழங்கிவருவதால் கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 15 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளிகளில் கூடுதலாகா சேர்ந்துள்ளனர். எனவே அதிகரித்து வரும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய வகுப்பறைகளுக்கான தேவைகளும் உயர்ந்துள்ளதால், கூடுதல் வகுப்பறைகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.


இதன் அடிப்பறையில், ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளுக்கு சுமார் ரூ.800 கோடி மதிப்பீட்டில் 6,000 புதிய வகுப்பறைகளும், உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கு சுமார் ரூ.250 கோடி மதிப்பீட்டில் சுமார் 1,200 வகுப்பறைகளும் என மொத்தம் ரூ.1050 கோடி மதிப்பீட்டில் 7,200 வகுப்பறைகள் நடப்பாண்டில் கூடுதலாக கட்டப்படும்


பள்ளிகளின் பராமரிப்பு பணிகளுக்கு என நடப்பாண்டியில் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள சுமார் ரூ.150 கோடி நிதியுடன் சேர்த்து தற்போது ரூ.115 கோடி கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசு பள்ளிகளை உரிய முறையில் பராமரிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் அரசு பள்ளிகளை நாடி வரும் தரமான பள்ளி கட்டமைப்பு கிடைக்க பெறுவதோடு பாதுகாப்பான கற்றல் சூழல் ஏற்படும் என தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog