புதிய கல்விக் கொள்கையை சத்தமின்றி நடைமுறைப் படுத்துகிறதா தமிழக கல்வித்துறை?!



இந்தியாவில் 34 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட `தேசிய கல்விக் கொள்கை 1986'-க்கு மாற்றாக கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு புதிய தேசிய கல்விக் கொள்கை- 2020-ஐ உருவாக்கியது.



இந்தக் கல்விக் கொள்கையின் வரைவு வெளியானபோதே, தமிழ்நாட்டிலிருந்து மிகக் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. மேலும், தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராகவும் ஆதரவாகவும் குரல்கள் எழுந்தன.



பிரதமர் மோடி முதல் ஆளுநர் ஆர்.என்.ரவி வரை எல்லா மேடைகளிலும் ஆதரவாகவும், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் முதல் தி.மு.க கூட்டணியிலுள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதும் என புதிய கல்விக் கொள்கை முற்றிலுமாக அரசியல் கருவியாகவே இருக்கிறது. இந்த நிலையில், தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக மாநில கல்விக் கொள்கையை உருவாக்கிவருகிறது தி.மு.க அரசு. இருந்தபோதும், தேசிய கல்விக் கொள்கையில் உள்ள அம்சங்களைப் பெயர் மாற்றி, சத்தமில்லாமல் அமல்படுத்திவருவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.


குறிப்பாக, `நான் முதல்வன்', `இல்லம் தேடிக் கல்வி', `தகைச்சால் பள்ளி', `எண்ணும் எழுத்தும் திட்டம்' உள்ளிட்ட தேசிய கல்விக் கொள்கையில் இருக்கும் அம்சங்களைப் பெயரை மட்டும் மாற்றி தமிழ்நாடு அரசு அமல்படுத்தியிருப்பதாக பா.ஜ.க குற்றச்சாட்டை முன்வைத்தது. அதேபோல, இலவச மதிய உணவுத் திட்டம், காலை உணவளிக்கும் வகையில் விரிவுபடுத்தப்படும் என்ற அம்சம் தேசிய கல்விக் கொள்கையில் இருக்கிறது.


அதைப்போலவே, அரசுப் பள்ளிகளில் காலை சிற்றுண்டித் திட்டம் சமீபத்தில் தொடங்கப்பட்டிருக்கிறது. மேலும், நான்காம், ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முறையும் தேசிய கல்விக் கொள்கையில் இருக்கிறது. இந்த நிலையில், தேசிய கல்விக் கொள்கையில் உள்ள, வயது வந்தோருக்கான 'புதிய பாரத எழுத்தறிவு திட்டம்' (New India Literacy Programme) என்ற திட்டத்தை அதே பெயரில் செயல்படுத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்திருக்கிறது.


தேசிய தகவல் மையம், தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுமம், தேசிய திறந்தவெளிப் பள்ளி ஆகியவற்றுடன் இணைந்து 2027-ம் ஆண்டுக்குள் கல்வி கற்காத 15 வயதுக்கு மேற்பட்ட ஐந்து கோடிப் பேருக்கு தன்னார்வலர்களைக்கொண்டு அடிப்படை எழுத்தறிவு பயிற்றுவிப்பதே புதிய பாரத எழுத்தறிவு திட்டம். அதன்படி, தமிழ்நாட்டில் ஐந்து லட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவு வழங்க தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை இலக்கு நிர்ணயித்திருக்கிறது. இதற்கான அறிவிப்பை பள்ளிசாரா மற்றும்‌ வயது வந்தோர்‌ கல்வி இயக்குநர் குப்புசாமி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியிருக்கிறார். இது தமிழ்நாடு அரசின் செயலுக்கு இன்னோர் எடுத்துக்காட்டு என்று எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டுகிறார்கள்.


 

அதேபோல, தேசிய கல்விக் கொள்கையிலுள்ள பட்டப்படிப்பு பயிலும் மாணவர்கள், ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட படிப்புகளைப் பயிலும் திட்டத்தை எல்லா பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் அமல்படுத்த வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி) அண்மையில் அறிவித்திருக்கிறது. இதை முறையாகச் செயல்படுத்தாத பல்கலைக்கழகங்களுக்கு, யு.ஜி.சி வழங்கும் மானியங்களை நிறுத்தவும் முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இதன் காரணமாக, இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை தமிழ்நாடு உயர்கல்வித்துறை ஆராய்ந்துவருவதாகக் கூறப்படுகிறது.

Comments

Popular posts from this blog