பொது பட்டியலுக்கு கல்வியை மாற்றிய வழக்கு நவ.7ம் தேதி இறுதி விசாரணை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு





ஒன்றிய அரசு கல்வியை மாநில பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றியது தொடர்பான அரசியல் சட்டத்தின் 42வது திருத்தம் கொண்டுவந்தது.



இதை எதிர்த்து ஆயிரம்விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏ டாக்டர் எழிலனின் அறம் செய்ய விரும்பு என்ற தொண்டு நிறுவனத்தின் மூலமாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவில், 1975 முதல் 1977ம் ஆண்டுகளில் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்ட போது, மாநில அரசுகளின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டு, வனம், நிர்வாகம், கல்வி, நீதி நிர்வாகம் உள்ளிட்டவை மாநில பட்டியலில் இருந்து பொது பட்டியலுக்கு மாற்றப்பட்டது.



மாநில அரசு பட்டியலில் இருந்த கல்வியை, பொதுப்பட்டியலுக்கு மாற்றி அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது கூட்டாட்சி கட்டமைப்புக்கு விரோதமானது. இதனால், கல்வி சம்பந்தமாக சட்டங்கள் இயற்றும் மாநில அரசின் அதிகாரம் பறிக்கப்பட்டு, மாநில சட்டங்கள் ஒன்றிய அரசின் சட்டங்களுக்கு கட்டுப்பட்டவையாக இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மனுதாரர் தரப்பு கோரிக்கையை ஏற்று, அரசியல் சட்ட பிரச்னை தொடர்பான இந்த வழக்கை மூன்று நீதிபதிகள் அமர்வு விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.


அதன்படி, நீதிபதிகள் மகாதேவன், சுந்தர் மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகிய மூன்று நீதிபதிகள் அமர்வு அமைக்கப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர், தமிழக அரசு மற்றும் ஒன்றிய அரசு தரப்பில், முழுமையான இறுதி விசாரணைக்கு முன் வழக்கு ஆவணங்களை பகிர்ந்து கொள்ள வேண்டியுள்ளதால் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்று கோரப்பட்டது. இக்கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கின் இறுதி விசாரணையை நவம்பர் 7ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Comments

Popular posts from this blog