சென்னை மாவட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் அறிவிப்பு



சென்னை மாவட்ட வருவாய் வட்டத்தில் வாரியாக காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



இதுகுறித்து சென்னை மாவட்ட கலெக்டர் அமிர்த ஜோதி வெளியிட்ட அறிவிப்பு: சென்னை மாவட்ட வருவாய் அலகில் 9 வருவாய் வட்டங்களில் காலியாக உள்ள 12 கிராம உதவியாளர் பணியிடங்கள் காலமுறை ஊதியம் அடிப்படையில் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் நேரடி விண்ணப்பங்கள் மூலம் நியமனம் செய்யப்பட உள்ளது. தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பம் பெற்றிட கடைசி தேதி அடுத்த மாதம் 7ம் தேதி ஆகும். மனுதாரர் விண்ணப்பிக்க வயது வரம்பு 30.9.2022 அன்று 21 வயதினை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.


பொதுப்பிரிவினர் அதிகபட்சமாக 32 வயது வரையும், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அதிகபட்சமாக 37 வயது வரையும் இருத்தல் வேண்டும். 


மனுதாரர் விண்ணப்பிக்கும் வட்டத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரரின் குறைந்த பட்ச கல்வித்தகுதியாக 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வரப்பெறும் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வின் மூலமாக மனுதாரர் தேர்வு செய்யப்படுவார்.


கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் தமிழக அரசின் இணையதளம் (https://www.tn.gov.in), வருவாய் நிருவாகத் துறையின் இணையதளம் (https://cra.tn.gov.in) மற்றும் சென்னை மாவட்ட அதிகாரப்பூர்வமான இணையதளம் (https://chennai.nic.in) மூலம் 10ம் தேதி(நேற்று முதல்)- அடுத்த மாதம் 7ம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog