ரேஷன் விற்பனையாளர், கட்டுநர் பணிக்கு ஆளெடுப்பு; அக். 13 முதல் விண்ணப்பிக்கலாம்!



ரேஷன் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர், கட்டுநர் பணியிடங்களுக்கு அக். 13ம் தேதி முதல் நவ. 14ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.


தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ், கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடத்தப்படும் ரேஷன் கடைகளில் விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களை, அந்தந்த மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. 


மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் குழு உறுப்பினர்கள், கூட்டுறவு கடைகளின் விற்பனையாளர் மற்றும் கட்டுநர் தேர்வு தொடர்புடைய விதிகளில் சில திருத்தங்கள் செய்து அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. 



அதன்படி, 5 உறுப்பினர்களைக் கொண்ட மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தில் மாவட்ட ஆட்சியரால் நியமனம் செய்யப்படும் ஒரு வருவாய்க் கோட்டாட்சியர், மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் அலுவலர் ஆகியோர் குழு உறுப்பினர்களாக புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளனர். 


மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம் கூட்டுறவு ரேஷன் கடைகளுக்கான விற்பனையாளர், கட்டுநர் தேர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டு உள்ளது. 


வெவ்வேறு கட்ட நடவடிக்கைகளுக்கு காலவரையறை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஆள்சேர்ப்பு நிலையத்தில் தங்களால் நியமனம் செய்யப்பட வேண்டிய ஒரு வருவாய்க் கோட்டாட்சியரை தாங்களே உடனடியாக நியமனம் செய்து ஆணை வழங்க வேண்டும். அந்த ஆணையின் நகலினை தங்களுடைய மாவட்டத்திற்கு தொடர்புடைய கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளருக்கு அனுப்பி வைக்க வேண்டும். 


குழு உறுப்பினராக சேர்க்கப்பட்டு உள்ள மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் அலுவலருக்கு கூர்நோக்குடைய மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் பணிகளுக்கு முன்னுரிமை கொடுத்து பணியாற்ற தக்க அறிவுரைகள் வழங்க வேண்டும்


கொரோனா தொற்றுக்குப் பின்னராக இந்த தெரிவு நடவடிக்கைகளுக்கு அதிக எண்ணிக்கையிலான நபர்கள் விண்ணப்பிக்கக்கூடும் என்பதால் தெரிவு நடவடிக்கைகளை எவ்வித புகாருக்கும் இடமின்றி நடத்த வேண்டும். 


நேர்முகத்தேர்வு நடைபெறும் நாளில் மையத்திற்கு பாதுகாப்பு வசதி ஏற்படுத்தி கொடுக்க மாவட்ட கண்காணிப்பாளருக்கு உரிய அறிவுரைகள் வழங்க வேண்டும். 



இதையடுத்து, இப்பணிக்கு அக். 13ம் தேதி முதல் நவ. 14ம் தேதி வரை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளன. அதன்பிறகு, நேர்முகத்தேர்வு டிச. 15ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடக்கிறது. அடுத்த ஆண்டு ஜனவரி 2ம் தேதி, தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டு, பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளது. 


இவ்வாறு, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் அனைத்து மாவட்ட ஆட்சியர், இணைப்பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog