அரசு பள்ளியில் ஆசிரியர் பணிக்கு தனியாக ஆள் சேர்ப்பு! வேலைக்கே வராமல் சம்பளம் பெற்ற அரசு ஊழியர்கள்!



அரசு பள்ளியில் ஆசிரியர் பணிக்கு தனியாக ஆள் சேர்ப்பு! வேலைக்கே வராமல் சம்பளம் பெற்ற அரசு ஊழியர்கள்!


வாரத்தில் ஒரு நாளில் அனைத்து நாட்களுக்கும் வருகை பதிவேட்டில் கையெழுத்து! தலைமை ஆசிரியருடன் கூட்டு சேர்ந்து சதி!


கோவை மாவட்டத்தை அடுத்த பேரூர் பகுதியில் உள்ள ஆலந்துறை அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றி வரும் கணித ஆசிரியை ஒருவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வாரம் ஒருமுறை வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டு வேலைக்கு வராமல் சம்பளம் பெற்று வந்துள்ளது அம்பலம் ஆகியுள்ளது.


ஒன்றரை வருடங்களாக அவரது கணித பாடத்தை மாணவர்களுக்கு நடத்துவதற்காக தலைமை ஆசிரியை ஒப்புதலோடு ஒரு பட்டதாரி ஆசிரியையை குறைந்த சம்பளத்தில் எடுத்து பணிக்கு அமர்த்தியுள்ளனர். சம்பந்தப்பட்ட ஆசிரியை வாரம் ஒரு முறை பள்ளிக்கு வந்து அனைத்து நாட்களுக்கும் பணிக்கு வந்ததாக அரசின் வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டு உள்ளார்.


இவ்வாறு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஒவ்வொரு மாதமும் சம்பளம் வாங்க தலைமை ஆசிரியை கடிதம் கொடுத்து வந்துள்ளார். அதே பள்ளியில் மற்றொரு ஆசிரியை இரண்டு வாரங்களாக பணிக்கு வராமல் வருகை பதிவில் கையெழுத்து போட்டு உள்ளார். அவருக்கு பதிலாக பாடம் நடத்துவதற்கு தற்காலிக ஆசிரியர் ஒருவரை பாடம் நடத்த வேலைக்கு வைத்துள்ளனர்.


 


இரு ஆசிரியைகளும் விடுப்பு எடுக்காமல், துறையின் அனுமதி பெறாமல் வீட்டில் இருந்தவாறு அரசிடம் சம்பளம் பெற்று வந்துள்ளனர். தலைமை ஆசிரியையுடன் கூட்டு சேர்ந்து அரசு பள்ளியை தங்கள் சொந்த பள்ளி போல் பாவித்து வேலைக்கு ஆள் வைத்து பாடம் நடத்தியுள்ளனர்.


இந்த மோசடிக்கு தலைமை ஆசிரியை தரப்பில் ஆசிரியைகளிடம் தனியாக பணம் வசூலிப்பதாகவும் குற்றச்சாட்டை எழுந்துள்ளது. இந்த விவகாரம் கடந்த வாரம் வெளியில் கசிந்த நிலையில் பள்ளி கல்வித்துறை அதிகாரி முதற்கட்ட விசாரணை நடத்தியுள்ளனர். சம்பந்தப்பட்ட ஆசிரியர் தாங்கள் தவறு செய்து விட்டதாக மற்றொரு ஆசிரியரிடம் பேசும் ஆடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது. இச்சம்பவம் குறித்து கல்வி பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் இரண்டாம் கட்ட விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

Popular posts from this blog