NEET: 7.5% உள்-ஒதுக்கீடு அரசுப்பள்ளி மாணவர்களின் முதலாமாண்டு முடிவுகள் சொல்வதென்ன?



இந்திய அளவில் உள்ள பல்வேறு மருத்துவப் படிப்புகளுக்கான உள்நுழைவு தகுதித் தேர்வாக நீட் உள்ளது. இத்தேர்வின் மூலம் 85% இளநிலை மருத்துவ இடங்கள் அம்மாநிலத்தின் மாணவர்களுக்காகவும், மீதமுள்ள 15% இளநிலை மருத்துவ இடங்கள் அகில இந்திய மாணவர்களுக்காகவும் ஒதுக்கப்படுகின்றன.


நம் மாநிலத்தைப் பொறுத்தவரையில் கடந்த 2020 அக்டோபரில் தமிழக அரசால் புதிய சட்டம் இயற்றப்பட்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கென மாநில மருத்துவ இடங்களில் 7.5% உள் ஒதுக்கீடு தரப்பட்டது. அதன்படி, நீட் தேர்வில் தகுதி பெற்ற 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களால் இந்த 7.5% உள் ஒதுக்கீட்டு இடங்கள் நிரப்பப்படும். நீட் தேர்வைப் பற்றியும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீட்டைப் பற்றியும் பலதரப்பட்ட வாதங்கள் இருந்துகொண்டேதான் இருக்கின்றன. இந்நிலையில்தான் முதலாம் ஆண்டு மருத்துவத் தேர்வு முடிவுகளும், அதில் அரசுப் பள்ளி மாணவர்கள் பெற்ற தேர்ச்சி விகிதமும் கவனம் பெறுகின்றன.


முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ். தேர்வு முடிவுகளின் படி 7.5% உள் ஒதுக்கீட்டில் மருத்துவக் கல்லூரிகளில் இடம்பெற்ற அரசுப் பள்ளி மாணவர்கள் 75% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களைத் தவிர்த்துள்ள மற்ற மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 85%. 2021-ம் ஆண்டில் 437 அரசுப் பள்ளி மாணவர்கள் எம்.பி.பி.எஸ் படிப்பிலும், 107 அரசுப் பள்ளி மாணவர்கள் பல் மருத்துவப் படிப்பிலும் இந்த உள் ஒதுக்கீட்டின் மூலம் சேர்ந்திருந்தனர். 2020-ம் ஆண்டில் மொத்தம் 433 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இந்த ஒதுக்கீட்டின் மூலம் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்திருந்தது. 2020-ம் ஆண்டு நீட் தேர்வில் தகுதி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களின் தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்த மாணவரின் நீட் மதிப்பெண் 664. 2021-ம் ஆண்டில் அதே பட்டியலில் முதலிடம் பிடித்தவரின் நீட் மதிப்பெண் 514. 2020-ல் மருத்துவப் படிப்பில் சேர்ந்த மாணவர்களின் முதலாம் ஆண்டு தேர்வு முடிவுகள் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகியிருந்த நிலையில், அதில் அரசுப் பள்ளி மாணவர்கள் மற்றும் பிற மாணவர்களின் தேர்ச்சி விகிதம் பற்றி மருத்துவக் கல்வி இயக்க வட்டாரங்கள் தற்போது தெரிவித்துள்ளன.


இது குறித்து கல்வியாளர் ப்ரின்ஸ் கஜேந்திரபாபு அவர்களிடம் பேசினோம். "அரசுப் பள்ளி மாணவர்கள், குறிப்பாகத் தமிழ் வழியில் கல்வி பயின்ற மாணவர்கள், மருத்துவக் கல்லூரிகளில் சிறப்பாகவே படிக்கிறார்கள். அரசுப் பள்ளி மாணவர்களின் இந்தத் தேர்ச்சி விகிதம் நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் வாங்குபவர் அதிக தகுதி படைத்தவராக இருக்கவேண்டியதில்லை என நிரூபித்திருக்கிறது. நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றிருந்தாலும் அவருக்குத் திறமை உள்ளது என்பதைக் காட்டுகிறது. பிள்ளைகளின் திறனையும், திறமையையும், மருத்துவப் படிப்பின் மீது அவர்களுக்கு இருக்கும் ஆர்வத்தையும் நீட் தேர்வால் மதிப்பிட முடியாது. இத்தேர்வு மருத்துவராகும் கனவிலிருந்து நிறைய மாணவர்களை விலக்கிவைக்கப் பயன்படுகிறதே தவிர, தகுதியானவர்களைக் கண்டறிவதற்குப் பயன்படவில்லை என்பது இதன் மூலம் மீண்டும் நிரூபணம் ஆகியிருக்கிறது.


இந்த 7.5% உள் ஒதுக்கீட்டிலும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இடமில்லை. அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. அங்கும் ஏழை மாணவர்கள்தான் படிக்கிறார்கள். ஆனாலும் அவர்களுக்கு உள் ஒதுக்கீட்டில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆனால் ஆர்.டி.ஈ. (RTE) மூலம் சி.பி.எஸ்.சி. பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு வரை படித்திருந்து, 9 முதல் 12-ஆம் வகுப்பு கல்வியை அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு இதே 7.5% உள் ஒதுக்கீட்டில் வாய்ப்பு வழங்குகிறது அரசு. இது எந்த விதத்தில் நியாயமாகும்?" என்று கேள்வி எழுப்புகிறார்.


இந்த 7.5% உள் ஒதுக்கீட்டை எதிர்த்தும், அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் இந்த இட ஒதுக்கீட்டை வழங்கக் கோரியும் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு இருந்தது. அதற்குச் கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்த இட ஒதுக்கீடு செல்லும் எனத் தீர்ப்பளித்திருந்து சென்னை உயர் நீதிமன்றம். கூடவே இதைப் பற்றி 5 ஆண்டுகளுக்குப் பின்னர் மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும், இந்த இட ஒதுக்கீடு நீடிக்கப்படாத நிலை ஏற்பட அரசுப் பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவித்திருந்து. அரசால் அரசுப் பள்ளிகளின் தரத்தைக் குறிப்பிட்ட காலத்திற்குள் உயர்த்த முடியுமா, அதற்கான வழிகளை மேற்கொள்ள அரசு ஆர்வம் காட்டுகிறதா என்று ப்ரின்ஸ் கஜேந்திரபாபு அவர்களிடம் கேட்டோம்.

அதற்குப் பதிலளித்த அவர், "அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் தனியார்ப் பள்ளிகளில் பயிலும் மாணவருக்கும் சமமான கற்றல் வாய்ப்பு கொடுக்கப்படுவதில்லை. இன்றும் அரசுப் பள்ளிகளில் வகுப்பெடுக்க ஆசிரியர்கள் இல்லாமலும், ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமலும் உள்ளன. சமமான கல்வி வாய்ப்பு, ஒரு பள்ளிக்கூடத்திற்கு இருக்கவேண்டிய பொதுவான வசதிகள் ஏதுமில்லாமல் இருக்கும் பள்ளிகள் இங்கு ஏராளம். அரசு அதைச் சீர் செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். அரசுப் பள்ளியை வலுப்படுத்துவதே அரசியலமைப்பு சட்டம் அரசுக்குக் கொடுத்துள்ள கடமை. ஒவ்வொரு பள்ளியின் தரத்தையும் உறுதிசெய்வது அரசின் கடமை. அது இந்த 7.5% உள் ஒதுக்கீட்டிற்காக மட்டுமல்ல. அதைத் தவிர்த்து, நீட் தேர்வை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது.


நீட் தேர்விற்கான பயிற்சி மையங்கள் இன்று பெரிய வியாபார சந்தையாக மாறியிருக்கின்றன. பயிற்சிக்கான கட்டணத்தை லட்சங்களில் வசூலிக்கின்றன இந்த மையங்கள். மருத்துவக் கல்வி வியாபாரமாகி விட்ட நிலையில், மருத்துவம் வியாபாரமாகாது என்பது என்ன நிச்சயம்? மருத்துவம் வியாபாரமாக ஆக்கப்பட்டால் நாளை அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்பச் சுகாதார நிலையங்களின் நிலை என்னவாகும்? சாமானியனின் மருத்துவத் தேவைகளை நிறைவேற்ற யார் இருப்பார்கள்? மருத்துவப் படிப்பில் சேர்க்கை பெறுபவர்களில் 90% நீட் பயிற்சி பெற்றவர்கள் என்று நீதிபதி ஆணையம் தெரிவித்துள்ளது. ஆக, பணம் படைத்தவர்களுக்குச் சாதகமான ஒரு களமாகவே நீட் தேர்வு இருக்கிறது. அரசு மருத்துவமனைகளில், அரசு ஆரம்பச் சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் வேண்டும் என்றால் நீட் தேர்வு ஒழிக்கப்படவேண்டும்" என்றார்.


மருத்துவப் படிப்பிற்கான தகுதித் தேர்வான நீட் பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பியிருந்த நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களின் இந்த தேர்ச்சி விகிதம் நீட் தேர்வின் திறன் சோதிக்கும் தகுதியைக் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.

Comments

Popular posts from this blog