TNPSC Group 2 Cut Off: கட் ஆஃப் எப்படி இருக்கும்? ரிசல்ட் எப்போது?




டிஎன்.பி.எஸ்.சி குரூப் 2 முதல்நிலைத் தேர்வு முடிவடைந்துள்ள நிலையில், கட் ஆஃப் மதிப்பெண்கள் எவ்வளவு இருக்கும்?


எத்தனை வினாக்களுக்கு சரியாக விடையளித்தவர்கள் முதன்மைத் தேர்வுக்கு தயாராகலாம் என்பதை இப்போது பார்ப்போம்.


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 முதல் நிலைத் தேர்வு கடந்த மே 21 ஆம் தேதி நடைபெற்றது. 5529 பதவிகளுக்கு நடந்த இந்த தேர்வை 9 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதியுள்ளனர். சுமார் 1.83 லட்சம் பேர் தேர்வு எழுதவில்லை.


இதனிடையே, குரூப் 2 முதல்நிலைத் தேர்விலிருந்து முதன்மைத் தேர்வுக்கு, ஒரு பதவிக்கு 10 பேர் (1:10) என்ற வீதத்தில் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் கடைசி கட் ஆஃப் மதிப்பெண்களில் தேவைக்கு அதிகமானோர் இருந்தாலும், அத்தனை பேரும் முதன்மைத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. அதாவது ஒரு பதவியில் கடைசி ஒரு இடத்திற்கு 10 பேர் தேர்வு செய்யப்பட வேண்டிய நிலையில், அதே கட் ஆஃப் மதிப்பெண்ணை 100 பேர் பெற்றிருந்தால், 100 பேரும் முதன்மைத் தேர்வுக்கு தகுதி செய்யப்படுவார்கள்.


எனவே, 5529 பணியிடங்களுக்கு 55000க்கும் அதிகமானோர் தேர்தெடுக்கப்படுவார்கள் என்ற நிலையில், தற்போது சுமார் 60,000 பேர் வரை அல்லது அதற்கு மேல் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ளது.


அதேநேரம், இடஒதுக்கீடு தொடர்பான நீதிமன்ற தீர்ப்புக்குப் பின்னர் கட் ஆஃப் மேலும் குறையலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் காலியிடங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், அதற்கேற்றாற்போல் அதிகமானோர் தேர்வு செய்யப்படும் பட்சத்தில், கட் ஆஃப் இன்னும் குறையலாம் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.


இதனால் பொது பிரிவினருக்கான கட் ஆஃப் 142 க்கும் மேலும், BC பிரிவினருக்கு 138 க்கும் மேலும், MBC பிரிவினருக்கு 132 - 137 வரையிலும், BCM பிரிவினர் 133க்கு மேலும், SC, SCA பிரிவினருக்கு 130-135 வரையிலும், ST பிரிவினருக்கு 128 க்கும் மேலும் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதில் 5 மதிப்பெண்கள் வரை கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ வரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இங்கு கட் ஆஃப் மதிப்பெண்கள் என குறிப்பிடப்படுவது, கேள்விகளின் எண்ணிக்கையே, தேர்வுக்கான மதிப்பெண்கள் அளவு அல்ல.


இதனிடையே குரூப் 2 தேர்வுகளுக்கான முடிவுகள் அக்டோபர், அதாவது இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog