குரூப் 2, 2ஏ மெயின் தேர்வுக்கு 17ம் தேதி விண்ணப்பிக்கலாம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு



குரூப் 2, குரூப் 2ஏ பதவிக்கான மெயின் தேர்வுக்கு வருகிற 17ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.


டிஎன்பிஎஸ்சி குரூப் 2 பதவியில் (நேர்முக தேர்வு பதவி), குரூப்-2ஏ பதவி (நேர்முகத் தேர்வு அல்லாத பதவி) என மொத்தம் 5,529 பணியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலை எழுத்து தேர்வை கடந்த மே மாதம் 21ம் தேதி நடத்தியது. இத்தேர்வில் 9 லட்சத்து 95 ஆயிரத்து 808 பேர் பங்கேற்றனர். தொடர்ந்து கடந்த 8ம் தேதி முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான பட்டியலை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. 


அதாவது, 58,081 பேர் மெயின் தேர்வு எழுத தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான மெயின் தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி 25ம் தேதி நடக்கிறது. இந்த நிலையில் முதன்மை தேர்வுக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்கள் தங்களின் மூலச் சான்றிதழ்களை தேர்வாணைய இணையதளத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் இசேவை மையங்கள் மூலம் வருகிற 17ம் தேதி முதல் டிசம்பர் 16ம் தேதி வரை பதிவேற்றம் செய்ய வேண்டும். 


குறிப்பிட்ட நாட்களுக்குள் விண்ணப்பதாரர்கள் பதிவேற்றம் செய்யவில்லை எனில், அவ்விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு பணிகளில் கலந்து கொள்ள விருப்பம் இல்லை என கருதி இந்த பதவிக்கு அவர்களது விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்படாது என்று டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா எச்சரித்துள்ளார்.

Comments

Popular posts from this blog