கொரோனா காலத்தில் 'ஆல் பாஸ்' அறிவிக்கப்பட்ட நிலையில் 10ம் வகுப்பு மதிப்பெண் கேட்கும் தேசிய தேர்வு முகமை ஜெஇஇ நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிக்கல்: தமிழக மாணவர்கள் கடும் அவதி



ஜெஇஇ என்னும் நுழைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க 10ம் வகுப்பு மதிப்பெண்கள் பதிவிட வேண்டும் என்று தேசிய தேர்வு முகமை அறிவிதுள்ளதால் தமிழக மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


நாட்டில் உள்ள என்ஐடி, ஐஐடி ஆகிய ஒன்றிய தொழில் கல்வி நிறுவனங்களின் மூலம் நடத்தப்படும் பிஇ, பிடெக், பிஆர்க், பிபிளான் படிப்புகளில் மாணவ மாணவியர் சேர்ந்து படிக்க ஜெஇஇ என்ற ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வை தேசிய தேர்வு முகமை ஒவ்வொரு ஆண்டும் நடத்துகிறது. இந்த தேர்வு நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் இரண்டு கட்டமாக நடத்தப்படுகிறது. அதில் முதன்மைத் தேர்வு, சிறப்பு தேர்வு என்ற அளவில் இரண்டாக ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் நடத்தப்படுகிறது. 


இந்த தேர்வின் மூலம் மாணவர்களின் மன அழுத்தம் குறைவதாக கூறப்படும் நிலையில், அந்த தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் தான் அவர்களுக்கான இடங்களை பெற தகுதியாக இருக்கிறது. இதற்காக மாணவ மாணவியர் மேற்கண்ட இரண்டு தேர்வுகளிலும் தேர்ச்சி பெறுவது கட்டாயம். ஜெஇஇ அட்வான்ஸ் எனப்படும் சிறப்பு தேர்வில் மும்பை, டெல்லி, கவுகாத்தி, கான்பூர், கரக்பூர், சென்னை, ரூர்க்கி, ஆகிய இடங்களில் உள்ள ஐஐடிகள் ஒன்றிணைந்து இந்த தேர்வை நடத்துகின்றன. ஜெஇஇ மெயின் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ மாணவியரில் முதல் 1 லட்சத்து 50 ஆயிரம் இடங்களில் வரும் நபர்களே ஜெஇஇ அட்வான்ஸ் தேர்வு எழுத முடியும். 


இந்த தேர்வும் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் முன்பு நடத்தப்பட்டது. தற்போது 13 மொழிகளில் நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் கடந்த 2016ம் ஆண்டில் தமிழகத்தில் இருந்து சுமார் 30 ஆயிரம் பேர் தேர்வு எழுதியும் 3 ஆயிரம் பேர்தான் தேர்ச்சி பெற்றனர் என்பது குறிப்பிடத் தக்கது. இந்நிலையில் 2023ம் ஆண்டு நடக்கப் போகும் தேர்வுக்கான அறிவிப்பை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. அதன் படி முதன்மைத் தேர்வு இரண்டு தாள்களுடன் நடத்தப்படுகிறது. (தாள் ஒன்றில் பிஇ, பிடெக்) இதில் தேர்ச்சி பெறுவோர் என்ஐடி, ஐஐஐடி மற்றும் சிஎப்டிஐஆகிய கல்வி நிறுவனங்களில் சேர முடியும். அட்வான்ஸ் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் ஐஐடிகளில் நடத்தப்படும் பிஆர்க், பி பிளானிங் படப்புகளில் இடம் கிடைக்கும். 


இந்நிலையில் 2023-2024ம் ஆண்டுக்கான ஜெஇஇ தேர்வு ஜனவரி, ஏப்ரல் மாதங்களில் நடத்தப்பட உள்ளது. ஜனவரி மாதத் தேர்வு எழுத விரும்புவோர் டிசம்பர் 15ம் தேதி முதல் 2023 ஜனவரி 12ம் தேதி வரை ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்க வேண்டும். கட்டணங்களை ஜனவரி 12ம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்களுக்கான அறிவிப்பு ஜனவரி இரண்டாம் வாரத்தில் வெளியாகும். அதைத் தொடர்ந்து ஜனவரி 3வது வாரத்தில் ஹால்டிக்கெட்டுகள் வழங்கப்படும். ஜனவரி 24, 25, 27, 28, 29 30 மற்றும் 31ம் தேதிகளில் தேர்வு நடக்கும். இந்த முதன்மைத் தேர்வு 13 மொழிகளில் குறிப்பாக தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி, அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடா, மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, உருது மொழிகளில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 


இதையடுத்து, நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களில் இருந்தும் மாணவ மாணவியர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாட்டில் தற்போது பிளஸ் 2 வகுப்பில் படித்து வரும் மாணவர்களும் விண்ணப்பித்து வருகின்றனர். மேற்கண்ட ஐஐடிகள் உள்ளிட்ட ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற இந்த நுழைவுத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் தான் கருத்தில் கொள்ளப்பட்டு அதில் மாணவர்கள் தரவரிசைப் படி இட ஒதுக்கீடு பெறுவார்கள். அதனால் மாணவ மாணவியர் பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும். அவர்கள் மேற்கண்ட தேர்வு எழுத தகுதி பெறுகின்றனர். 


ஆனால், இந்த முறை, மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் போது, 10ம் வகுப்பில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களையும் தேசிய தேர்வு முகமை கேட்டுள்ளது. அவ்வாறு மதிப்பெண்களை டைப் செய்தால் மட்டுமே அடுத்த கட்டத்துக்கு விண்ணப்பிக்க முடியும். இந்தநிலையை ஒன்றிய அரசு புதிதாக உருவாக்கியுள்ளதால், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 2020ம் ஆண்டில் நாடு முழுவதும் பரவிய கொரோனா தொற்று சுமார் ஒன்றரை ஆண்டு நீடித்த நிலையில் பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்டு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தான் பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்பட்டன. 


அதற்கு பிறகு படிப்படியாக நிலைமை சீரடைந்த பிறகு முழுமையாக இயங்கத் தொடங்கின. அதனால் கடந்த ஆண்டில் பொதுத் தேர்வு நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. எனவே பொதுத் தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவ மாணவியர் அனைவரும் 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது. இதற்கு பிறகு தேர்வுத்துறை வழங்கிய பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியலில் தேர்ச்சி என்று மட்டுமே அச்சிட்டு வழங்கப்பட்டுள்ளது. அதில் மதிப்பெண் குறிப்பிடப்படவில்லை. இந்நிலையில், தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள ஜெஇஇ தேர்வுக்கான விண்ணப்பப் படிவத்தில் 10ம் வகுப்புக்கான மதிப்பெண்ணையும் குறிப்பிட வேண்டும் என்று கேட்டுள்ளது. 


தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் 10ம் வகுப்பு தேர்வு மதிப்பெண் மாணவர்களிடம் கிடையாது. அதனால் அவர்கள் விண்ணப்பங்களை தேசிய தேர்வு முகமை ஏற்காது. தமிழக மாணவர்களும் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்படும். 

இந்த பிரச்னை தற்போது பெரிய பிரச்னையாக வடிவெடுத்துள்ளது. இது குறித்து கல்வியாளர்கள் கூறும் போது, ஜெஇஇ நுழைவுத் தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் முக்கியமே தவிர பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மதிப்பெண்கள் முக்கியமில்லை. இருப்பினும் பிளஸ் 2 தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். 


இந்நிலையில் 10ம் வகுப்பு மதிப்பெண்ணை ஏன் கேட்கிறார்கள் என்பது புரியவில்லை. தற்போது பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கின்ற மாணவர்கள் மார்ச் ஏப்ரல் மாதங்களில் தேர்வு எழுதி மதிப்பெண் பட்டியல் கொடுக்கும் வரை பத்தாம் வகுப்பு மதிப்பெண்ணை வாங்கி வைத்துக் கொள்ளலாம். ஒரு வேளை தேர்வு நடத்த முடியாத நிலை ஏற்படும் போது பத்தாம் வகுப்பு மதிப்பெண்ணை வைத்தும் மதிப்பீடு செய்யலாம் என்ற அடிப்படையில் வாங்கி இருக்கலாம். ஜெஇஇ நுழைவுத் தேர்வு மதிப்பெண்படிதான் சேர்க்கை வழங்கப்படும் என்பதால் 10ம் வகுப்பு மதிப்பெண் தேவையில்லை என்று தெரிவிக்கின்றனர். 


இந்த சர்ச்சை குறித்து பல புகார்கள் பள்ளிக் கல்வித்துறைக்கு வந்ததை அடுத்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி அதிரடியாக நடவடிக்கையில் இறங்கியுள்ளார். அதன்படி பள்ளிக் கல்வி ஆணையர் மூலம் தேசிய தேர்வு முகமைக்கு கடிதம் எழுதி, தமிழக மாணவர்கள் பத்தாம் வகுப்பு மதிப்பெண்களை விண்ணப்பத்தில் பதிவு செய்வதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார். இதற்கு தேசிய தேர்வு முகமையும் ஒத்துழைப்பு தருவதாக தெரிவித்துள்ளது என்று பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா தெரிவித்துள்ளார். 


தேசிய தேர்வு முகமை இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், தமிழகத்தை சேர்ந்த சுமார் 40 ஆயிரம் மாணவ மாணவியர் ஜெஇஇ தேர்வுகளை எழுத முடியாத நிலை ஏற்படும். இதனால் ஒன்றிய அரசு இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் தமிழக மாணவர்களை ஒன்றிய அரசு வேண்டும் என்றே பழிவாங்குவதாக கருத வேண்டியது வரும் என்று தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டியிருப்பது உண்மையாகிவிடும் என்கின்றனர் தமிழக மக்கள். பொதுத் தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவ மாணவியர் அனைவரும் 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது. இதற்கு பிறகு தேர்வுத்துறை வழங்கிய பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியலில் தேர்ச்சி என்று மட்டுமே அச்சிட்டு வழங்கப்பட்டுள்ளது. அதில் மதிப்பெண் குறிப்பிடப்படவில்லை.

Comments

Popular posts from this blog