12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்! அரசுக்கு கொங்கு ஈஸ்வரன் வலியுறுத்தல்!



12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.


அரசு பள்ளிகளில் 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் உடற்கல்வி, ஓவியம், கணினி, தையல், இசை, தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல்திறன் ஆகிய சிறப்பு பாடங்களில் கடந்த 2012-ம் ஆண்டு ரூபாய் 5 ஆயிரம் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்டார்கள்.


பின்னர் 2014-ம் ஆண்டு சம்பள உயர்வு 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. அடுத்து 2017-ம் ஆண்டு சம்பள உயர்வு எழுனூறு ரூபாய் வழங்கப்பட்டது. கடைசியாக 2021-ம் ஆண்டு சம்பள உயர்வு 2 ஆயிரத்து 300 ரூபாய் வழங்கப்பட்டது.


இதனால் தொகுப்பூதியம் ரூபாய் 10 ஆயிரம் ஆனது. இவர்களில் 4 ஆயிரம் காலிப்பணி இடங்கள் ஏற்பட்டது. 2021-ம் ஆண்டு கணக்குப்படி 12 ஆயிரம் பேர் பணி செய்து வருகிறார்கள்.


முதல்வர் அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தின் போது பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வோம் என்று உறுதி அளித்திருந்தார். இதுவரை பணி நிரந்தரம் செய்யப்படாதது பகுதிநேர ஆசிரியர்களின் மத்தியில் ஒரு குறையாக இருந்து வருகிறது.


ஏழை அடித்தட்டு விளிம்பு நிலையில் உள்ள பகுதிநேர ஆசிரியர்கள் குடும்பங்கள் வறுமையில் வாடுகிறார்கள். எனவே பொங்கல் போனஸ் மற்றும் பண்டிகை முன்பணம் இம்முறையாவது பகுதிநேர ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும்.


மேலும், சம்பளத்தை உயர்த்துவதோடு பணிநிரந்தரம் செய்ய வேண்டும். 12 ஆயிரம் குடும்பங்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட, மாண்புமிகு முதல்வர் அவர்கள் மனிதாபிமானத்துடன் பரிசீலிக்க வேண்டும். பகுதிநேர ஆசிரியர்களின் நியாயமான இந்த கோரிக்கையை முதல்வர் அவர்கள் நிறைவேற்ற வேண்டும்.

Comments

Popular posts from this blog