அரசு கல்லூரிகளில் தற்காலிகமாக 4000 பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்



தமிழ்நாடு அரசு கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப்பேராசிரியர் பணியிடங்களில் 4000 பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டு அதற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.


இப்பணியிடங்கள் தவிர, மீதம் காலியாக உள்ள 1895 பணியிடங்களுக்கு மாணவர்களின் நலன் கருதியும் அரசு கல்லூரிகளில் முறையான கல்வி சூழல் நிலவுவதை உறுதிசெய்யும் நோக்கிலும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தற்காலிகமாக 2022-2023 ஆம் கல்வியாண்டிற்கு கௌரவ விரிவுரையாளர்களை நியமிக்க அறிவுறுத்தப்பட்டது.


இக்காலிப்பணியிடங்களுக்கு கௌரவ விரிவுரையாளர்களை தெரிவு செய்வதற்கான இணையவழி விண்ணப்பங்கள் பல்கலைக் கழக மானியக் குழு வழிகாட்டு நெறிமுறைகளின்படி கல்வித் தகுதி பெற்றுள்ள பணிநாடுநர்களிடமிருந்து பெற்று கௌரவ விரிவுரையாளர்கள் தேர்வு செய்யப்படுவர்.


பணிநாடுநர்கள் தங்கள் விண்ணப்பத்தினை இணையதளத்தில் பதிவிட வசதியாக www.tngasa.in என்ற இணையதளம் இன்று உயர்கல்வித் துறை அமைச்சரால் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. கௌரவ விரிவுரையாளர் பணியில் சேர தகுதி பெற்ற பணிநாடுநர்கள் இன்று முதல் (15.12.2022) முதல் 29.12.2022 வரை பதிவு செய்யலாம்.


இவ்வாறு பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மண்டல வாரியாக பரிசீலிக்கப்பட்டு தகுதி வாய்ந்த பணிநாடுநர்கள் அரசால் வழங்கப்பட்ட வழிகாட்டுநெறிமுறைகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த கௌரவ விரிவுரையாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.20,000 மதிப்பூதியமாக வழங்கப்படும்.

Comments

Popular posts from this blog