பட்டதாரி ஆசிரியர்கள் பத்தலை; பாடங்களை முடிக்க முடியலை




கோவை : உயர்நிலைப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகரிப்பதால், எட்டு பட்டதாரி ஆசிரியர்களாவது நியமித்தால் தான் சமாளிக்க முடியும் என, தலைமையாசிரியர்கள் புலம்புகின்றனர்.


கோவை மாவட்டத்தில், 83 அரசு மற்றும் 22 உதவி பெறும் உயர்நிலைப்பள்ளிகள் உள்ளன. இங்கு, ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்பு கையாள, ஐந்து பட்டதாரி ஆசிரியர்களே நியமிக்கப்படுகின்றனர்.


பாடவாரியாக, ஐந்து பாடங்களுக்கு ஐந்து ஆசிரியர்கள் என கணக்கிட்டு, நியமனம் செய்யப்படுகிறது. மாணவர் எண்ணிக்கை அதிகரித்தாலும், கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதில்லை.


ஓய்வே இல்லாமல் கற்பித்தல்


சிறப்பு ஆசிரியர்கள் இருக்கும் பட்சத்தில், அவர்களின் கல்வித்தகுதி பொறுத்து, கீழ்வகுப்புகளுக்கு பாடவேளைகள் ஒதுக்கப்படுகின்றன. இப்பணியிடமும் இல்லாத பள்ளிகளில், ஆசிரியர்கள் ஓய்வே இல்லாமல், கற்பிக்கும் நிலை நீடிக்கிறது.


குறிப்பாக, பட்டதாரி ஆசிரியர்கள் வாரத்திற்கு, 28 வகுப்புகள் கையாள வேண்டும். இதன்படி கணக்கிட்டு தான், பாடவேளைகள் ஒதுக்கப்படும். போதிய ஆசிரியர்கள் இல்லாத நிலையில், ஒருநாளைக்கு ஏழு பாடவேளைகளும், ஆசிரியர்கள் வகுப்பு எடுக்க வேண்டியுள்ளது. இதனால், 35 பாடவேளைகள் வரை, ஆசிரியர்கள் வகுப்பு கையாள்கின்றனர்.


தற்போது மாணவர்களின்றி உபரியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்களை, வேறு பள்ளிகளுக்கு இடமாறுதல் அளிக்க, கவுன்சிலிங் நடக்கவுள்ளது.


காலியிடங்கள் நிரப்பியது போக, மீதமுள்ள ஆசிரியர்களை, கூடுதலாக மாணவர்கள் படிக்கும் பள்ளிகளுக்கு, மாறுதல் வழங்க வேண்டும். இதுகுறித்து பலமுறை எடுத்துக்கூறியும், கல்வித்துறை மவுனம் சாதிப்பதாக, புகார் எழுந்துள்ளது.


பட்டதாரி ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், 'ஒருநாளைக்கு எட்டுபாடவேளைகள் உள்ள நிலையில், ஏழு வகுப்புகள் கையாள்கிறோம். கீழ்நிலை வகுப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்க முடியவில்லை. பொதுத்தேர்வு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளும் கையாள வேண்டியுள்ளது.


இதோடு, எமிஸ் இணையதளத்தில், மாணவர்களின் விபரங்களை பதிவிடுமாறு அவ்வப்போது உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன. 


வார இறுதி நாட்களில், வட்டார வள மைய கூட்டம், ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.


இதே சூழலில் ஆசிரியர்கள் ஓடிக்கொண்டே இருப்பதால், பெரும்பாலானோர் கடும் மனஉளைச்சலில் உள்ளனர். கூடுதல் ஆசிரியர்களை நியமித்தால் தான், பணிப்பளு சற்று குறையும். பொதுத்தேர்வு மாணவர்கள் மீதும் கவனம் செலுத்தி, தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க முடியும்' என்றனர்.


அரசு உயர்நிலைப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமையாசிரியர்களும் வாரம் 10 பாடவேளைகள் கையாள வேண்டும். பெரும்பாலானோர் முறையாக வகுப்பு எடுக்காமல், ஆசிரியர்களுக்கு கூடுதல் பணிப்பளு அளித்து, அதிகாரம் செலுத்தி வந்தனர். தற்போது சி. இ.ஓ., பூபதி பொறுப்பேற்றது முதல், தலைமையாசிரியர்களும், 'நோட்ஸ் ஆப் லெசன்' எனும் பாடக்குறிப்புகள் எழுதி வகுப்பு கையாள வேண்டுமென, உத்தரவு பிறப்பித்துள்ளார். இருப்பினும், இந்நடைமுறையை சில தலைமையாசிரியர்கள் பின்பற்றாததும், பணிப்பளு அதிகரிக்க காரணம் என்ற கருத்து எழுந்துள்ளது.


Comments

Popular posts from this blog