நீட் நுழைவு தேர்வு தேதி அறிவிப்பு




நடப்பு கல்வி ஆண்டுக்கான நீட் மற்றும் ஜே.இ.இ., தேர்வு அட்டவணையை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.



பிளஸ் 2 படித்து முடிக்கும் மாணவர்கள், தேசிய உயர்கல்வி நிறுவனங்களான, ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., என்.ஐ.டி., போன்றவற்றில், இன்ஜினியரிங் இளநிலை படிப்பில் சேர்வதற்கு, தேசிய அளவிலான நுழைவு தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும். அதேபோல், நாடு முழுவதும் பிளஸ் 2 முடித்து, மருத்துவ படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.


இது தவிர நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில், இளநிலை மற்றும் முதுநிலை சேர்வதற்கு, மத்திய பல்கலை பொது நுழைவு தேர்வு என்ற கியூட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கான, நுழைவு தேர்வு தேதிகளை தேசிய தேர்வு முகமை, நேற்று இரவு வெளியிட்டது.


ஜே.இ.இ., மெயின் தேர்வு முதல் கட்டமாக, ஜனவரி 24 முதல் 31 வரை நடக்கிறது. ஜன., 24, 25, 27, 28, 29, 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் தேர்வு நடத்தப்பட உள்ளது. இரண்டாம் கட்டம் ஏப்., 6, 8,10, 11 மற்றும் 12ம் தேதிகளில் நடத்தப்படுகிறது.


எம்.பி.பி.எஸ், மற்றும் பி.டி.எஸ்., படிப்பில் சேர்வதற்கான, நீட் நுழைவுத் தேர்வு மே 7ம் தேதி நடத்தப்படுகிறது. மத்திய பல்கலைக்கழகங்களுக்கான, கியூட் தேர்வு, மே 21 முதல் 31 வரையிலும், வேளாண்மைக்கான ஐ.சி.ஏ.ஆர்., தேர்வு ஏப்ரல் 26,27, 28 மற்றும், 29ம் தேதிகளில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


தேர்வுக்கான விண்ணப்ப பதிவு மற்றும் இதர அறிவிப்புகள், www.nta.ac.in என்ற இணையதளத்தில் பின்னர் வெளியிடப்படும் என்று, தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog