TN TRB Annual Planner 2023: பள்ளி, கல்லூரி ஆசிரியர் பணிக்கான தேர்வுகள் - முழு அட்டவணையை வெளியிட்ட டி.ஆர்.பி.; விவரம்



2023ஆம் ஆண்டுக்கான கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான தேர்வுகள் நடைபெறும் மாதங்களும் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையும் அடங்கிய உத்தேசத் தேர்வு அட்டவணையை டிஆர்பி வெளியிட்டுள்ளது.


குறிப்பாக உதவிப் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் உள்ளிட்ட கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர், இடைநிலை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள் உள்ளிட்ட பள்ளி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான தேர்வுகள் நடைபெறும் மாதங்களையும் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையையும் டிஆர்பி எனப்படும் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.


இதன்படி, அரசு கல்வியியல் கல்லூரிகள் மற்றும் கலை, அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் 4 ஆயிரம் ஒதுக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியாக உள்ளது. உதவிப் பேராசிரியர் பணியிடத்துக்கான தேர்வு 2023 ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது.


வட்டாரக் கல்வி அலுவலர் பணிக்கு 23 காலி இடங்கள் உள்ளன. இவர்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு 2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வெளியாக உள்ளது. வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடத்துக்கான தேர்வு 2023 மே மாதத்தில் நடைபெற உள்ளது.


6,553 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்


அதேபோல தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் உருது ஆகிய பாடங்களுக்கான இடைநிலை ஆசிரியர்களுக்கான அறிவிப்பும் வெளியாகி உள்ளது. இதில், 6,304 தமிழ் ஆசிரியர்கள், 133 தெலுங்கு ஆசிரியர்கள், 3 கன்னட ஆசிரியர்கள், 113 உருது ஆசிரியர்கள் என மொத்தம் 6,553 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கான தேர்வு அறிவிப்பு, 2023 மார்ச் மாதத்தில் வெளியாக உள்ளது. தேர்வு மே மாதத்தில் நடைபெற உள்ளது.


3587 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் குறித்த அறிவிப்பு, 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியாக உள்ளது. இவர்களுக்கான தேர்வுகள் ஜூன் மாதத்தில் நடைபெற உள்ளன.


அரசுக் கல்லூரிகளில் பணியிடங்கள்


அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன. 493 பணியிடங்களுக்கான அறிவிப்பு, 2023 மே மாதத்தில் வெளியாக உள்ள நிலையில், தேர்வு ஆகஸ்ட்டில் நடைபெறுகிறது.


 


அரசு பொறியியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் குறித்த அறிவிப்பு, ஜூன் மாதத்தில் வெளியாக உள்ளது. 97 பணி இடங்களுக்கான தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது.


சட்டக் கல்லூரிகளில் 129 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு ஜூலை மாதத்திலும் தேர்வு அக்டோபர் மாதத்திலும் நடக்க உள்ளது. 267 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு நவம்பர் மாதம் நடைபெற உள்ளது.


ஆசிரியர் தகுதித் தேர்வு


2023ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2-க்கான அறிவிப்பு 2023 டிசம்பர் மாதத்தில் வெளியாக உள்ளது. 2024 மார்ச் மாதத்தில் தேர்வு நடைபெற உள்ளது. இதன்மூலம் ஒட்டுமொத்த 15,149 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.




Comments

Popular posts from this blog