ஆசிரியர் காலி பணியிடங்களில் நியமிக்க கோரி பதிவு மூப்பு பட்டதாரிகள் தொடர் முற்றுகை போராட்டம்



பள்ளிக் கல்வி மற்றும் தொடக்க கல்வித்துறைகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில், பதிவு மூப்பு பட்டதாரிகள், இடைநிலை ஆசிரியர்களை பணியமர்த்த வேண்டும் என்று கேட்டு, 500க்கும் மேற்பட்ட பட்டதாரிகள், இடைநிலை ஆசிரியர்கள் டிபிஐ வளாகத்தில் தொடர் முற்றுகை மற்றும் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.


கடந்த 2009ம் ஆண்டு ஒன்றிய அரசு கொண்டு வந்த கட்டாய இலவச கல்வி உரிமைச் சட்டத்தில் தெரிவித்துள்ள அம்சங்களில் பள்ளிகளில் ஆசிரியர் பணிநியமனம் செய்யப்படுவோர் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. அந்த சட்டம் 2010ம் ஆண்டில் அனைத்து மாநிலங்களிலும் நடைமுறைக்கு வந்தது. 


தமிழ்நாட்டிலும் 2010ம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. அதற்கு முன்னதாக, தமிழ்நாட்டில், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போருக்கு பதிவு மூப்பின் அடிப்படையில் ஆசிரியர் பணி நியமனங்கள் செய்யப்பட்டன. அதற்காக சான்று சரிபார்க்கப்பட்டவர்களில் பெரும்பகுதியினர் பணி நியமனம் பெற்றனர். அதில் 2000 பட்டதாரிகள், 1500 இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கு பணி நியமனம் வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டது. அவர்களுக்கு இதுவரையில் பணி நியமனம் வழங்கவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுக இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. 


தற்போது அமைந்துள்ள ஆட்சியில் காலிப்பணியிடங்கள் நிரப்பும் பணி நடப்பதை அடுத்து, காலிப் பணியிடங்களை நிரப்பும் போது தங்களுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கேட்டு தமிழ்நாடு பதிவு மூப்பு பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் கூட்டமைப்பினர் கடந்த மாதம் சென்னை கல்லூரி சாலையில் உள்ள டிபிஐ வளாகத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். மீண்டும் நேற்று டிபிஐ வளாகத்தில் முற்றுகை மற்றும் தொடர் உண்ணாவிரதம் தொடங்கினர். இதுகுறித்து, கூட்டமைப்பின் மாநில தலைவர் ரத்தின குமார் கூறுகையில், ''கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக அரசு பணியிடம் நிரப்புவது குறித்து முடிவுகள் எடுக்காமல் எங்களை பழிவாங்கிவிட்டது. தகுதியுள்ள எங்களுக்கு பணி நியமனம் வழங்காமல் எங்கள் வாழ்வாதாரத்தை பாதிக்க செய்துவிட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் தொடர் முற்றுகை மற்றும் உண்ணாவிரதம் இருக்கிறோம்'' என்றார்.

Comments

Popular posts from this blog