நீட்டை எதிர்க்கும் தமிழ்நாடு கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கு மீண்டும் தேர்வு நடத்துவதா? - கௌரவ விரிவுரையாளர்கள் கூட்டமைப்பு கேள்வி




மருத்துவ படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு நடத்தப்படும் நீட் தேர்வினை எதிர்க்கும் திராவிட மாடல் ஆட்சியில் அரசு கல்லூரியில் உதவி பேராசிரியர் பணிக்கு முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்துவதா?என கௌரவ விரிவுரையாளர்கள் கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.



தமிழ்நாடு அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரி கௌரவ விரிவுரையாளர் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் அதன் ஒருங்கிணைப்பாளர்கள் தங்கராஜ், முருகன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அதில் அவர்கள், "தமிழ்நாட்டில் அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் பணிபுரிந்து வரும் கௌரவ விரிவுரையாளர்கள் பல்கலைக்கழகம் மானிய குழு நிர்ணயித்த கல்வித் தகுதியை பெரும் பட்சத்தில், உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என்ற தமிழக அரசின் 2010 மார்ச் 22ஆம் தேதி உத்திரவாத கடிதத்தை பின்பற்றி அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி உத்தரவின் படி அரசாணை 56 வெளியிடப்பட்டது.


அந்த அரசாணையில் 1146 பணியிடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. சான்றிதழ் சரிபார்க்கப்பட்டவர்களுக்கும், மற்றும் தற்பொழுது தகுதியுள்ள கௌரவ விரிவுரையாளர்களையும் பணி நிரந்தரம் செய்திட வேண்டும். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி சம வேலைக்கு சம ஊதியம் என்பதன் அடிப்படையில் பல்கலைக்கழக மானிய குழு பரிந்துரைத்த சம்பளம் 50,000 வழங்க வேண்டும். பாண்டிச்சேரி கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தமிழ்நாட்டை விட அதிக அளவில் சம்பளம் வழங்குகின்றனர்.


167 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணியாற்றிய வரும் 5,303 கௌரவ விரிவுரையாளர்களில் சுமார் 1,900 நபர்கள் பல்கலை கழக மானியக்குழுவின் தகுதியை இன்னும் அடையவில்லை. இவர்களில் பெரும்பானவர்கள் 2009-இல் எம்பில் பட்டம் பெற்றுள்ளனர். மீதமுள்ள பெரும்பாலானவர்கள் முனைவர் பட்டம் படித்து வருகின்றனர். எனவே கௌரவ பிரிவு உள்ளவர்கள் நலன் கருதி பல்கலைக்கழகம் மானிய குழு தகுதியை ஏற்படுத்திக்கொள்ள கால அவகாசம் வழங்க வேண்டும்.


ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள அறிவிப்பின்படி வரும் காலங்களில் போட்டித் தேர்வு முறை இருக்காது என்று வெளியிட்டுள்ள அரசாணை 246 ,247, 248 ரத்து செய்ய வேண்டும். கல்லூரியில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்கள் ஏற்கனவே நெட், செட், பி.ஹெச்.டி போன்ற தேர்வுகளை எழுதி தகுதி பெற்றுள்ளோம். இந்த நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் மீண்டும் போட்டித் தேர்வு நடத்துவதை ஏற்க முடியாது.


பல்கலைக்கழக மானியக் குழுவின் வழிகாட்டுதலின்படி பணியாற்றி வரும் கௌரவவிரிவுரையாளர்களுக்கு தமிழக உயர்கல்வித்துறை நிலுவை தொகையாக 20 லட்சம் முதல் 30 லட்சம் வரை தர வேண்டி இருக்கும். எங்களுக்கு பணி அனுபவம் கிடைக்கும் என்பதற்காகவே நாங்கள் தொடர்ந்து பணிபுரிந்து வருகிறோம்.


ஏற்கனவே தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அறிவித்துள்ள 2,331 உதவி பேராசிரியர் பணியிடங்களையும் 56 அரசாணைப்படி அறிவித்துள்ள 1,146 உதவி பேராசிரியர் பணியிடங்களையும் அப்பொழுது உள்ள கல்வி தகுதி மற்றும் பணி நியமன முறையில் நியமிக்க வேண்டும். தமிழ்நாட்டில் கொத்தடிமை முறை ஒழிப்போம் எனக்கூறி வரும் நிலையில் பெயிண்டர் கொத்தனார் உள்ளிட்ட தினக்குழி பணியாளர்களை விட குறைந்த ஊதியத்தில் எங்களை நியமித்து ஊதியம் வழங்குகின்றனர்.


திராவிட மாடல் ஆட்சியில் நீட் தேர்வு வேண்டாம் என கூறிவரும் நிலையில் கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கு ஏற்கனவே செட், நெட் தேர்வு எழுதி முனைவர் பட்டம் பெற்றுள்ளவர்களுக்கு மீண்டும் தேர்வு வைப்பது எந்த விதத்தில் நியாயம் என கேள்வி எழுப்பினர்.


மேலும் கடந்த 15 ஆண்டுகளாக மாணவர்களின் நலன் கருதி குறிப்பிட்ட பகுதி பாடத்தை மட்டுமே தாங்கள் நடத்தி வந்ததாகவும், தற்போது புதிதாக படித்து விட்டு வரும் இளைஞர்களுடன் தங்களால் போட்டி தேர்வு எழுதி தகுதி பெறுவது சிரமம் எனவும் தெரிவித்தனர்.


தமிழ்நாட்டில் உள்ள பணி புரியும் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டி ஏற்கனவே போராட்டம் நடத்தி வருகிறோம். அரசு எங்களின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் சென்னையில் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் என தெரிவித்தனர்.



Comments

Popular posts from this blog