TNPSC Exam: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வை உடனடியாக ரத்து செய்க - அன்புமணி ராமதாஸ்





தமிழகம் முழுவதும் குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வுகள் நேற்று நடைபெற்ற நிலையில், பல மையங்களில் தேர்வு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.


தமிழ் தேர்வுக்கான வினாத்தாள் விநியோகத்தில் குளறுபடி ஏற்பட்டதால் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மையங்களிலும் தேர்வு சரியான நேரத்தில் துவங்கப்படவில்லை. இதனால் தேர்வர்கள் மிகுந்த அதிருப்தி அடைந்தனர். திருநெல்வேலி, தென்காசி தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் தேர்வு துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் பல இடங்களில் சலசலப்பு நிலவி வருகிறது.


இந்தநிலையில் டி.என்.பி.எஸ்.சி. குரூப் - 2 முதன்மை தேர்வை நடத்துவதில் குளறுபடிகள் நிகழ்ந்துள்ளதால், தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியிருக்கிறார்.


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "தமிழ்நாட்டில் இன்று நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. தொகுதி இரண்டுக்கான முதன்மை தேர்வு ஏராளமான குளறுபடிகளுடன் மிகவும் தாமதமாக தொடங்கியுள்ளது.


பல இடங்களில் தேர்வர்களுக்கு வினாத்தாள்கள் வழங்கப்பட்டு, அவற்றின் பதிவு எண்கள் தவறாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பின்னர் திரும்ப பெறப்பட்டுள்ளது. இதன்மூலம் பல இடங்களில் வினாத்தாள் வெளியாகிவிட்டது. டி.என்.பி.எஸ்.சியின் அலட்சியமே இதற்குக் காரணம்.


போட்டித்தேர்வுகளில் அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்கப்பட வேண்டும். தேர்வர்களுக்கு மன உளைச்சல், பதற்றம் இல்லாத சூழல் உறுதிப்படுத்தப்பட வேண்டும். ஆனால் இன்றைய தேர்வில் சமவாய்ப்பும் இல்லை, மன உளைச்சல் இல்லாத சூழலும் ஏற்படுத்தப்படவில்லை.



சமவாய்ப்பு அற்ற சூழலில் நடத்தப்படும் தேர்வுகளில் சமநீதி கிடைக்காது. எனவே இன்றைய தேர்வை உடனடியாக ரத்துசெய்துவிட்டு, அனைத்து குளறுபடிகளையும் களைந்துவிட்டு, வேறு ஒருநாளில், அமைதியான சூழலில் இத்தேர்வை டி.என்.பி.எஸ்.சி மீண்டும் நடத்தவேண்டும்." என்று அவர் வலியுறுத்தியிருக்கிறார்.

Comments

Popular posts from this blog