'நீட்' தேர்வு விண்ணப்ப பதிவு துவக்கம்



மருத்துவ படிப்பில் சேர்வதற்கான 'நீட்' நுழைவு தேர்வுக்கு 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு துவங்கியுள்ளது; ஏப்ரல் 6 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.


பிளஸ் 2 தேர்ச்சி பெறும் மாணவர்கள் மருத்துவ படிப்புகளில் சேர 'நீட்' நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். நடப்பு கல்வி ஆண்டில் நீட் நுழைவு தேர்வு மே 7ம் தேதி நடக்கிறது. ஆன்லைன் பதிவு neet.nta.nic.in இணையதளத்தில் நேற்று முதல் துவங்கியுள்ளது.


தேசிய தேர்வு முகமையின் தேர்வுகள் பிரிவு மூத்த இயக்குனர் சாதனா பராஷர் வெளியிட்ட அறிவிப்பு: நீட் நுழைவு தேர்வுக்கு ஏப். 6ம் தேதி இரவு 9:00 மணிக்குள் விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும். கட்டணத்தை ஏப். 6 இரவு 11:50 மணிக்குள் செலுத்த வேண்டும். விண்ணப்பத்தில் திருத்தம் செய்வதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.


தேர்வு கட்டணமாக பொது பிரிவுக்கு 1700 ரூபாய்; மிக பிற்படுத்தப்பட்டோரில் 'கிரீமிலேயர்' பிரிவில் இல்லாதவர்கள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான இட ஒதுக்கீடு பெறுவோர் ஆகியோருக்கு 1600 ரூபாய்; பட்டியலினத்தவர் பழங்குடியினர் மாற்று திறனாளிகள் திருநங்கைகளுக்கு 1000 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


வெளிநாட்டு தேர்வு மையத்தில் எழுதும் அனைத்து பிரிவினருக்கும் 9500 ரூபாய் கட்டணம். இந்த கட்டணத்துடன் செயல்பாட்டு கட்டணம் மற்றும் ஜி.எஸ்.டி. வரியும் செலுத்தப்பட வேண்டும்.


இந்திய நேரப்படி மதியம் 2:00 மணி முதல் மாலை 5:20 மணி வரை தேர்வு நடக்கும். மூன்று மணி நேரம் 20 நிமிடங்கள் தேர்வு நடக்கும். விபரங்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தேர்வு கட்டணம் கடந்த ஆண்டை விட 100 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog