10ம் வகுப்பு ஆங்கில தேர்வில் அனைவருக்கும் 3 மார்க்! வினாத்தாள் குழப்பத்தால் உத்தரவு




: 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆங்கில வினாத்தாளில் 3 மதிப்பெண்களில் குழப்பம் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் தற்போது 3 மதிப்பெண்களை வழங்க தமிழ்நாடு தேர்வுத்துறை உத்தரவிட்டு உள்ளது.


தமிழ்நாடு அரசு சார்பில் ஆண்டுதோறும் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. 11 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு, அதன் பிறகு 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் நடைபெற்றன.


தமிழ்நாட்டில் 9 லட்சத்து 22 ஆயிரத்து 725 மாணவ மாணவிகளும், புதுச்சேரியில் 15 ஆயிரத்து 566 பேரும், 37 ஆயிரத்து 798 பேர் தனித்தேர்வர்களாகவும் தேர்வை எழுத விண்ணப்பித்து இருந்தனர். மொத்தம் 9 லட்சத்து 76 ஆயிரத்து 89 மாணவ மாணவிகள் இந்த தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்த நிலையில் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்வு தொடங்கியது.


இதில் ஆங்கில மொழித் தேர்வில் கேட்கப்பட்ட 2 கேள்விகளில் குழப்பம் இருந்ததாக மாணவ மாணவிகள் தெரிவித்தனர். ஆசிரியர்களும் அதை பிழையான கேள்வி என்றே தெரிவித்தனர். அதாவது, ஒரு மதிப்பெண் பிரிவில் வினா எண் 4, 5, 6 ஆகியவை குழப்பமாக இருந்ததாக கூறப்பட்டது. SYNONYMS (அருஞ்சொற்பொருள் அறிக), ANTONYMS (எதிர்ச்சொல் அறிக) பிரிவில் இந்த பிழை இடம்பெற்று இருந்தது.



வினாத்தாளில் இடம்பெற்ற 1 முதல் 6 வரையிலான கேள்விகள் மூன்று மூன்றாக பிரித்து SYNONYMS, ANTONYMS என்று தலைப்பிடுவதற்கு பதிலாக 6 கேள்விகளுக்கும் SYNONYMS என்று வினாத்தாளில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனால் தேர்வெழுதிய மாணவர்கள் குழப்பம் அடைந்தனர். தேர்வெழுதி முடித்துவிட்டு வந்த மாணவர்களிடம் வினாத்தாளை வாங்கி பார்த்த ஆசிரியர்களும் இந்த தவறை சுட்டிக்காட்டினர்.


இந்த நிலையில் வினாத்தாளில் குழப்பம் இருப்பதால் கேள்வி எண் 4, 5, 6 ஆகியவற்றுக்கு தலா ஒரு மதிப்பெண் என 3 மதிப்பெண்களை வழங்க வேண்டும் என தேர்வுத்துறைக்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்து இருக்கிறது. இது தொடர்பாக பரிசீலனை செய்வதாக தேர்வுத்துறை விளக்கம் அளித்த நிலையில் தற்போது 3 மதிப்பெண்களை வழங்குவதாக தேர்வுத்துறை அறிவித்து இருக்கிறது

Comments

Popular posts from this blog