10ஆம் வகுப்பு ஆங்கில வினாத்தாளில் எழுத்துப் பிழை, தவறு.. இவ்வளவு கவனக்குறைவு சரியா?- வெடிக்கும் சர்ச்சை



10ஆம் வகுப்பு ஆங்கில வினாத்தாளில் 3 கேள்விகள் முறையாகக் கேட்கப்படவில்லை என்பதால் அவற்றுக்கு உரிய மதிப்பெண்கள் வழங்கவேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மாநிலம் முழுவதும் ஏப்ரல் 6ஆம் தேதி 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு தொடங்கியது. முதல் நாளில் தமிழ் பாடத்துக்குத் தேர்வு நடைபெற்ற நிலையில், இன்று (ஏப்ரல் 10ஆம் தேதி) ஆங்கிலப் பாடத்துக்கான பொதுத் தேர்வு நடைபெற்றது. 12,800 பள்ளிகளில் உள்ள 3,986 தேர்வு மையங்களில், சுமார் 10 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதி வருகின்றனர். 


வழக்கமாக 1,2,3 ஆகிய கேள்விகள் SYNONYMS (அருஞ்சொல் பொருள்) ஆகவும் 4,5,6 ஆகியவை ANTONYMS (எதிர்ச் சொல்) ஆகவும் கேட்கப்படும். ஆனால் இன்று கேட்கப்பட்ட 4,5,6 ஆகிய கேள்விகளுக்கு மேலே, ANTONYMS என்று அச்சிடப்படவில்லை. இதனால் அருஞ்சொற் பொருளை எழுத வேண்டுமா அல்லது எதிர்ச் சொல்லை எழுத வேண்டுமா என்று மாணவர்கள் குழப்பமடைந்தனர்.


இந்தக் கேள்விகளுக்குக் கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


வினாத் தாளில் கேட்கப்பட்டிருந்தது என்ன?


10ஆம் வகுப்பு ஆங்கில வினாத் தாளில், 4ஆவது கேள்வியாக I forgot all about Mr, Hamel’s ruler and how cranky he was: என்ற கேள்வி கேட்கப்பட்டிருந்தது. அதற்கு விருப்பங்களாக,


(a) unusal (b) familiar (c} unfamiliar (d) strange என்ற பதில்கள் கொடுக்கப்பட்டிருந்தன. 


இதில் முதல் விருப்பமாக unusual என்பதற்கு பதிலாக, unusal என்று பிழையாக அச்சிடப்பட்டிருந்தது. அதேபோல, CRANKY என்னும் கேள்விக்கு அருஞ்சொல் பொருட்களாக, unusual, unfamiliar, strange என்ற மூன்று விடைகளுமே வரும். எதிர்ச் சொல்லாக familiar என்ற விடை மட்டுமே வரும். இதன்மூலம் இந்தக் கேள்வியும் 5 மற்றும் 6ஆவது கேள்விகளும் எதிர்ச் சொல்லை எழுதுக - வகைமைக் கேள்விகள் என்பதை அறியலாம். ஆனால் வினாத் தாளில் அப்படி எதுவும் குறிப்பிடப்படவில்லை. அருஞ்சொல் பொருளை எழுதுக என்னும் வகைமைக்குக் கீழேயே கொடுக்கப்பட்டிருந்ததே, மாணவர்கள் குழப்பம் அடைந்தனர்.


இதனால், 4, 5, 6 வினாக்களுக்கு பதில் எழுத முயற்சித்த அனைவருக்கும் 3 மதிப்பெண்கள் (GRACE MARKS) வழங்கப்பட வேண்டும் என்று மாணவர்கள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


12ஆம் வகுப்பு வினாத்தாள் சர்ச்சை


ஏற்கனவே 12ஆம் வகுப்பு கணிதம் மற்றும் கணினி அறிவியல் வினாத்தாள் வடிவமமைப்பிலும் பல தவறுகள் இருந்தன. இதை அடுத்து பிளஸ் 2 பொதுத் தேர்வு கணிதப் பாடத்தில் கேள்வி எண் 47(b)-க்கு மாணவர்கள் பதிலளிக்க முயற்சித்து இருந்தாலே போதும். அதற்கு 5 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்று அரசுத் தேர்வுகள் துறை உத்தரவு பிறப்பித்திருந்தது.


இந்நிலையில் பொதுத் தேர்வு வினாத் தாள்களில் தொடரும் குழப்பங்களால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. 


Comments

Popular posts from this blog