கியூட் நுழைவுத் தேர்வுக்கு 14 லட்சம் விண்ணப்பங்கள்: பல்கலைக் கழக மானியக் குழு தகவல்




இளங்கலை படிப்புகளுக்கான கியூட் நுழைவுத் தேர்வுக்கு 14 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாக பல்கலைக் கழக மானியக் குழு தெரிவித்துள்ளது.


நாடு முழுவதுமுள்ள மத்திய, மாநில பல்கலை கழகங்களில் இளங்கலை, முதுகலை பட்டப் படிப்புகளில் மாணவர்கள் சேர பொது நுழைவுத் தேர்வு கியூட் தேர்வு கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. நடப்பு ஆண்டுக்கான பொது நுழைவுத் தேர்வு மே மாதம் 21ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெற உள்ளது. தேர்வுக்கான விண்ணப்ப தேதி மார்ச் 30ம் தேதியுடன் நிறைவடைந்து விட்டது.


இதுகுறித்து பல்கலைக் கழக மானியக் குழு தலைவர் எம்.ஜெகதேஷ் குமார் கூறியதாவது, 'இந்த ஆண்டு இளங்கலை கியூட் நுழைவுத் தேர்வுக்கு 14 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. இது 2022ம் ஆண்டு கியூட் தேர்வு அறிமுகமானபோது செலுத்தப்பட்ட விண்ணப்பங்களை விட 41 சதவீதம் அதிகம். அதிகபட்சமாக டெல்லி பல்கலைக் கழகம், தொடர்ந்து பனாரஸ் இந்து பல்கலைக் கழகம், அலாகாபாத் பல்கலைக் கழகம், பாபாசகேப் பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக் கழகம் மற்றும் ஜமியா பல்கலைக் கழகங்கத்துக்கும் விண்ணப்பிக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக உத்தரபிரதேசம், டெல்லி மற்றும் பீகார் மாநிலங்களை சேர்ந்தவர்கள் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டு 90ஆக இருந்த பல்கலைக் கழகங்களின் எண்ணிக்கை நடப்பு ஆண்டு 242ஆக அதிகரித்துள்ளது. ஜம்மு காஷ்மீரை பொறுத்தவரை கடந்த ஆண்டு 13 ஆயிரத்து 21 மாணவர்கள் விண்ணப்பத்திருந்த நிலையில், தற்போது 82 ஆயிரத்து 655 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்'. இவ்வாறு கூறினார்.

Comments

Popular posts from this blog