TN 10th Exam: அதிர்ச்சி... விழுப்புரம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு 960 மாணவர்கள் ஆப்சென்ட்




மாநிலம் முழுவதும் இன்று தொடங்கப்பட்டுள்ள பத்தாம் வகுப்பு பொது தேர்வில் முதல் நாளான இன்று நடைபெற்ற தமிழ் பாட தேர்வினை விழுப்புரம் மாவட்டத்தில் 960 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை.



மொத்தமுள்ள 25 ஆயிரத்து 623 மாணவர்களில் 24 ஆயிரத்து 663 மாணவர்கள் இன்று தேர்வு எழுதியுள்ளனர். 


தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. இந்தத் தேர்வு வருகின்ற 20-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 125 தேர்வு மையங்களில் பத்தாம் வகுப்புத் தேர்வு நடைபெறுகிறது. 


இந்த தேர்வை, 364 பள்ளிகளை சேர்ந்த 13,006 மாணவர்களும், 12,621 மாணவிகளும் என மொத்தம் 25,627 மாணவ- மாணவிகள் எழுதி வருகின்றனர். தேர்வுப் பணிகளில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட 2 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.


தேர்வின் போது மாணவர்கள் ஏதேனும் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடாத வண்ணம் இருக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் தலைமையில் 176 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கும் பணியில் ஈடுபட உள்ளனர்.


மேலும் அனைத்து தேர்வு மையங்களிலும் காவல் துறையின் மூலம் பாதுகாப்பு வசதிகள் மற்றும் தடையற்ற மின்சார வசதிகள் குடிநீர் வசதிகள் ஆகியவை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பு தேர்வினை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் பழனி முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா திருவிக வீதியிலுள்ள அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர்.


இந்த நிலையில் தேர்வுக்கு விண்ணப்பித்த மொத்தமுள்ள 25 ஆயிரத்து 623 மாணவர்களில் 24 ஆயிரத்து 663 மாணவர்கள் இன்று தேர்வு எழுதியுள்ளனர். மீதமுள்ள 960 மாணவர்கள் தேர்வை எழுதவில்லை. ஏற்கெனவே 12ஆம் வகுப்பு மொழிப் பாடங்கள் மற்றும் இயற்பியல் உள்ளிட்ட முக்கிய பாடங்களுக்கான தேர்வை சுமார் 50 ஆயிரம் பேர் எழுதவில்லை. 


இந்த விவகாரம் சர்ச்சையைக் கிளப்பி, சட்டப்பேரவை வரை எதிரொலித்தது. இந்த நிலையில், 10ஆம் வகுப்புத் தேர்வை விழுப்புரம் மாவட்டத்தில் 960 மாணவர்கள் தேர்வை எழுதவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.

Comments

Popular posts from this blog