TNPSC: குரூப்-4 தட்டச்சர் தேர்வில் முறைகேடா? - மீண்டும் புதிய சர்ச்சை!



தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 4 தேர்வில் சுருக்கெழுத்தர் மற்றும் தட்டச்சர் பணிக்கு தென்காசி மாவட்டத்தில் மட்டும் 600 பேர் தேர்ச்சி பெற்றது பல்வேறு சந்தேகங்களை கிளப்பி உள்ளது.



தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடத்தப்பட்ட குரூப் 4 தேர்விற்கான முடிவுகள் கடந்த மார்ச் 24ஆம் தேதி வெளியிடப்பட்டது. அந்த முடிவுகளின் அடிப்படையில் 10 ஆயிரத்து 117 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.


தேர்வு முடிவுகள் வெளியானதில் இருந்து குருப் 4 தேர்வுகள் குறித்து தேர்வர்கள் தரப்பில் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் குரூப் 4 பதவியில் அடங்கிய சுருக்கெழுத்தர் மற்றும் தட்டச்சர் பணியிடத்திற்கான 2,500 காலி பணியிடங்களில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அமைக்கப்பட்ட தேர்வு மையங்களில் இருந்து 450 பேர் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருப்பது சந்தேகத்தை கிளப்பி உள்ளது. 


மேலும் தென்காசி மாவட்டம் முழுவதிலும் அமைக்கப்பட்ட தேர்வு மையங்களில் இருந்து மொத்தம் 600 பேர் பணியிடத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பதும் தெரிய வந்துள்ளது. தற்போது தேர்ச்சி பெற்றவர்கள் அனைவரும் தென்காசி மாவட்டத்தை சார்ந்தவர்களா அல்லது வெவ்வேறு மாவட்டங்களை சார்ந்தவர்களா, தென்காசி மற்றும் சங்கரன்கோவிலில் அமைக்கப்பட்ட தேர்வு மையங்களை தேர்ந்தெடுத்து தேர்வு எழுதியவர்களா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.


கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான குரூப் 4 தேர்வில் கீழக்கரை மற்றும் ராமேஸ்வரம் தேர்வு மையங்களை அதிகளவு தேர்வர்கள் தேர்ந்தெடுத்து முறைகேடாக தேர்ச்சி பெற்றது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக தற்போது தென்காசி மாவட்டத்திலிருந்து அதிக அளவு தேர்வர்கள் தேர்ச்சி பெற்றிருப்பது பல்வேறு வகைகளில் சந்தேகங்களை எழுப்பியுள்ளது.


தற்போது தேர்ச்சி பெற்றுள்ள 600 பேரும் தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதை அரசு பணியாளர் தேர்வாணையம் உறுதிப்படுத்தினால் மட்டுமே பிரச்சனை முடிவுக்கு வரும். இல்லையென்றால் இதிலும் முறைகேடுகள் நடந்து இருக்க வாய்ப்பு உள்ளதாக தேர்வர்கள் கருத்துக்களை முன்வைக்கின்றனர்.


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அதிக அளவில் போட்டி தேர்வர்கள் கலந்து கொள்ளும் தேர்வினை அந்தந்த மாவட்டத்திற்குள் நடத்துகிறது. குரூப் 4 தேர்விற்கு அதிக அளவில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு வட்டத்திற்கு இரண்டு மூன்று இடங்களிலும் தேர்வினை நடத்துகிறது. அவ்வாறு இருக்கும் போது அந்த மாவட்டத்தையும் அந்த ஊர் பகுதியை சாராதவர்கள் ஒரு குறிப்பிட்ட தேர்வு மையத்தை தேர்வு செய்து எழுதுவது என்பது சந்தேகத்தை கிளப்புவதாகவே உள்ளது.


போட்டித் தேர்விற்கு விண்ணப்பிக்கும் போதே அவர்கள் எந்த மாவட்டம் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதை தேர்வாணையம் தெளிவாக பெற்றுக் கொள்கிறது. இந்த நிலையில் வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஒரு குறிப்பிட்ட தேர்வு மையத்தில் தேர்வெழுதுவதற்கு அனுமதிக்கப்படுவதால்ல் அங்கு முறைகேடு நடப்பதாக தேர்வர்களால் கூறப்படுகிறது. 


Comments

Popular posts from this blog