அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர மே 8 முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்



அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர 8-ம் தேதி முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



இது குறித்து உயர்கல்வி துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணாக்கர் சேர்க்கைக்கான (2023-2024) விண்ணப்பங்களை www.tngasa.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம். இணையதள வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணாக்கர்கள் கல்லூரி உதவி மையங்கள் (Admission Facilitation Centre - AFC) மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இம்மையங்களின் பட்டியல் இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.


விண்ணப்பக் கட்டணமாக ஒவ்வொரு ஐந்து கல்லூரிகளுக்கும் ரூ.48, பதிவுக் கட்டணமாகரூ.2 செலுத்த வேண்டும். SC/ST பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. பதிவுக் கட்டணமாக ரூ.2 மட்டும் செலுத்த வேண்டும்.


விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் Debit Card/ CreditCard/ Net Banking மூலம் இணையதள வாயிலாக செலுத்தலாம். இணையதள வாயிலாகக் கட்டணம் செலுத்த இயலாத மாணாக்கர்கள் கல்லூரி சேர்க்கை உதவி மையங்களில் 'The Director, Directorate of Collegiate Education, Chennai - 15' என்ற பெயரில் 08/05/2023 அன்று அல்லது அதற்குப் பின்னர் பெற்ற வங்கி வரைவோலை அல்லது நேரடியாகவும் செலுத்தலாம். மாணவர் சேர்க்கை வழிகாட்டி மற்றும் கால அட்டவணையை இணையதளங்கள் வாயிலாக அறிந்துகொள்ளலாம்.


இணையதள வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்யத் துவங்கும் நாள் மே.8. இணையதள வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய முடியும் நாள் மே.19. மேலும் தகவல்களுக்கு 1800 425 0110 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.


Comments

Popular posts from this blog