''பள்ளிப் படிப்பிற்கு பின்னர் உயர்கல்வியை தேர்வு செய்வது எப்படி'' - சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி!



பொதுத்தேர்வில் மாணவர்கள் மதிப்பெண் குறைவாகப் பெற்றதால் மட்டுமே அவர்களுக்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டதாக பெற்றோர்கள் கருதக்கூடாது என சென்னை ஐஐடியின் இயக்குநர் காமகோடி தெரிவித்துள்ளார்.



பள்ளிப்படிப்பை முடித்து உயர்கல்வியில் சேரும் மாணவர்கள் ஒரு பட்டப்படிப்புடன் கூடுதலாக டேட்டா சயின்ஸ் அல்லது எலக்ட்ரானிக்ஸ் போன்ற படிப்புகளை கற்றுக்கொண்டால் வேலைவாய்ப்பு உள்ளது என சென்னை ஐஐடியின் இயக்குநர் காமகோடி தெரிவித்துள்ளார்.


சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி ஈடிவி பாரத்திற்கு சிறப்புப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 8ஆம் தேதி தமிழ்நாட்டில் இருந்து மாநில பாடத்திட்டத்தில் தேர்வு எழுத மாணவர்களுக்கு வருகிறது. பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வந்த பின்னர் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகள் என்ன படிக்க விரும்புகிறார்கள் என்பதைக் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.


பெற்றோர்கள் குழந்தைகளை தங்களுக்குப் பிடித்த படிப்பினை படிக்க சொல்லக் கூடாது. குழந்தைகளுக்குப் பிடித்த படிப்பை படிக்க அனுமதிக்க வேண்டும். இதுதான் அடிப்படையாகும். மாணவர்கள் தேர்வினை எழுதி விட்டார்கள். தேர்வு முடிவுகள் வர உள்ளது. அதில் மதிப்பெண் குறைந்துவிட்டது என அவர்களை எதுவும் கூறக்கூடாது. பெற்றோர்கள் குழந்தைகளுக்கு ஆறுதல் கூற வேண்டும். ஜேஇஇ தேர்வு எழுதி நான் தோல்வி அடைந்தேன். ஆனால், அதே ஜேஇஇ தேர்வுகளுக்குத் தலைவராக இருந்து நடத்தினேன். மதிப்பெண் குறைந்து விட்டது என்பதற்காக பெற்றோர்கள் குழந்தைகளை குறை கூறக்கூடாது. தற்போது கற்பிக்கப்படும் அனைத்து துறைகளிலும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு அதிக அளவில் உள்ளது.


சென்னை ஐஐடியில் கற்பிக்கப்படும் ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் உட்பட அனைத்து துறைகளிலும் வேலை வாய்ப்பு உள்ளது. கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையில் மட்டுமே வேலைவாய்ப்பு இருக்கிறது என கருதக்கூடாது. கரோனா காலத்தில் நாம் மாஸ்க் போட்டுக் கொண்டிருந்தோம். தற்பொழுது மாஸ்க் இல்லாமல் பேசுகிறோம் அதற்குக் காரணம் பயாலஜிக்கல் சயின்ஸ் கண்டுபிடித்த தடுப்பூசியாகும். கம்ப்யூட்டர் சயின்ஸ் தடுப்பூசியை கண்டுபிடிக்கவில்லை. அதேபோல் பல்வேறு இடங்களில் பாலங்கள் மற்றும் கட்டுமானங்களை செய்யும் சிவில் இன்ஜினியரிங் துறையிலும் வேலைவாய்ப்பு உள்ளது. ஓசோன் இன்ஜினியரிங் துறையிலும் வேலை வாய்ப்பு இருக்கிறது.


அனைத்து துறைகளிலும் வேலை வாய்ப்பு இருக்கிறது. ஆனால் குறிப்பாக கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் துறையில் சம்பளம் உடனடியாக அதிகமாக கிடைக்கும். ஆனால், அதில் குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர் மாற்றங்கள் ஏற்படும். சிவில் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், அப்ளைடு சயின்ஸ் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் முதலில் சம்பளம் குறைவாக இருக்கும். வேலை வாய்ப்பிற்கும் வளர்ச்சிக்கும் நன்றாக வாய்ப்பு இருக்கிறது. டேட்டா சயின்ஸ் மற்றும் ஆர்டிபிசியல் இன்ஜினியரிங் ஆகிய பிரிவுகளுக்கு நல்ல வேலை வாய்ப்பு இருக்கிறது.


ஆனால், அதனை தனியாகப் படிக்காமல் வேறு ஒரு படிப்புடன் சேர்ந்து படிக்க வேண்டும். பல்கலைக்கழக மானியக்குழு ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்புகளை படிக்க அனுமதி வழங்கி உள்ளது. எனவே, பொறியியல் அல்லது கலை அறிவியல் பாடத்தில் குறிப்பிட்ட பாடத்தைப் படிக்கும்பொழுது மாலை நேரங்களில் ஆன்லைன் மூலம் டேட்டா சயின்ஸ் படிப்பினை படித்து தெரிந்துகொள்ளலாம். அடுத்ததாக தற்பொழுது எலக்ட்ரானிக் சிஸ்டம் முக்கியப்பங்கு வகிக்கிறது. மொபைல் போன் சரி செய்வதில் இருந்து செமி கன்டக்டர் வரை எலக்ட்ரானிக் சிஸ்டம் தேவைப்படுகிறது.


பொறியியல் பட்டத்தைப் படிக்கும் மாணவர்கள் இதனையும் மாலை நேரத்தில் ஆன்லைன் மூலம் சென்னை ஐஐடியில் இணைந்து படிக்க முடியும். கட்டுமானப் பணியிலும் தற்பொழுது எலக்ட்ரானிக்ஸ் பயன்படுத்தி தானியங்கி முறையில் பொருத்த வேண்டிய நிலை உள்ளது. எனவே, சிவில் இன்ஜினியரிங் உள்ளிட்ட பிற துறைகளை படிப்பவர்களும் எலக்ட்ரானிக்ஸ் படித்துக் கொள்வது பயனுள்ளதாக அமையும். பொறியியல் மற்றும் கலை அறிவியல் பாடத்தினை படிக்கும் மாணவர்களும் ஒருங்கிணைந்த பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டும். பிஎஸ் டேட்டா சயின்ஸ் மற்றும் பிஎஸ் எலக்ட்ரானிக்ஸ் பாடப்பிரிவில் சேர்வதற்கு ஜேஇஇ மெயின் தேர்வில் தகுதி பெற்றாலே இடம் அளிக்கப்படுகிறது.


மாணவர்கள் படிக்கும்பொழுது அந்தப் பாடத்தின் மீது ஆர்வமுடன் காதல் வயப்பட்டு படிக்க வேண்டும். எம்ஏ பப்ளிக் பாலிசி படித்த மாணவர்கள் ஐஏஎஸ் பணிக்குச் செல்ல முடியும். பி.காம் மற்றும் டேட்டா சயின்ஸ் படித்த மாணவர்களை வங்கியில் பணிபுரிய கேட்கின்றனர்.


இன்ஜினியரிங் மற்றும் மெடிக்கல் மட்டுமல்லாமல் பிற படிப்புடன் டேட்டா சயின்ஸ் படித்து இருந்தால் பெரிய அளவில் முன்னேற்றம் அடைய முடியும். சென்னை ஐஐடியில் இன்ஜினியரிங் மற்றும் மெடிக்கல் சயின்ஸ் இந்தாண்டில் கலந்து புதிய பாடப்பிரிவினை அறிமுகம் செய்ய உள்ளோம்.


பேச்சிலர் சயின்ஸ் இன் மெடிக்கல் சயின்ஸ் இன்ஜினியரிங் என்ற புதிய பாடப்பிரிவு தொடங்கப்பட உள்ளது. டாக்டர்களுக்கு இன்ஜினியரிங் தெரிந்தால் நல்லது எனக் கண்டறிந்துள்ளோம். எனவே, அது போன்ற படிப்பையும் அறிமுகம் செய்ய உள்ளோம். மெடிக்கல் மற்றும் இன்ஜினியரிங் மட்டுமே வாழ்க்கை அல்ல; பிற துறைகளைத் தேர்வு செய்தாலும் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும். 



ஒரு குறிப்பிட்ட பட்டத்துடன் கூடுதலாக வேறொரு பட்டத்தையும் சேர்த்து படித்தால் வேலை வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. ஜேஇஇ மெயின் தேர்வு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அட்வான்ஸ் தேர்விற்கு தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.


இதற்காக ஏற்கனவே கடந்த காலங்களில் நடத்தப்பட்ட ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வின் கேள்வித்தாள்களை எடுத்து பயிற்சி பெற வேண்டும். ஜேஇஇ தேர்வினை எழுதுவதற்கு ஐஐடி கான்பூர் புதிதாக இணையதளம் மூலம் பயிற்சி வழங்கி வருகின்றனர். அதில் மாணவர்கள் பயிற்சி பெற்றால் தாங்கள் என்ன தவறு செய்தார்கள் என்பதையும் வருங்காலத்தில் அவர்கள் படிக்க வேண்டிய பாடங்கள் குறித்தும் தெரிவிக்கப்படுகிறது" எனக் கூறினார்.



Comments

Popular posts from this blog