ரத்து ஆகிறதா பிளஸ் 1 பொதுத் தேர்வு?



பள்ளிக்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஏற்கனவே 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பில் மட்டும் பொதுத்தேர்வு நடமுறையில் இருந்தது. ஆனால் வணிக அந்தஸ்தை உயர்த்தவும், பெரும்புகழ் அடையவும் விரும்பும் தனியார் பள்ளிகள் 100 சதவீத ரிசல்டிற்காக 10-ஆம் வகுப்பு பாடத்தை ஒன்பதாம் வகுப்பிலேயே தொடங்கி நடத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது. 


அதே போல் 12-ஆம் வகுப்பு பாடத்தை 11-ஆம் வகுப்பிலேயே சில தனியார் பள்ளிகள் நடத்த தொடங்கிவிடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.


சில தனியார் பள்ளிகளின் இத்தகைய நடவடிக்கைகளால் மாணவர்கள் முறையான கல்வியை பெற முடியாததோடு மதிப்பெண்ணை மட்டுமே நோக்கமாக கொண்ட பந்தயத்திற்கு தயாராவதாக 12-ஆம் வகுப்பு மாறிப்போனது.


 இதன் அபாயம் குறித்து கல்வியாளர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வந்த நிலையில் தனியார் பள்ளிகளின் அடாவடித்தனத்தை கட்டுப்படுத்தும் விதமாக 11-ஆம் வகுப்பு தேர்வையும் பொதுத்தேர்வாக தமிழக அரசு அறிவித்தது.


தமிழக அரசின் இந்த அறிவிப்பு மாணவர்களின் நலன் கருதி கொண்டுவரப்பட்டாலும் தொடர்ந்து 3 ஆண்டுகள் பொதுத்தேர்வை சந்திப்பதால் மாணவர்கள் மிகுந்த அழுத்தத்திற்கு ஆளாகும் நிலை உருவானது. 


இந்த அழுதத்தோடு கொரோனா கால இடர்பாடுகளும் சேர்ந்துகொண்டது. இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வை சுமார் 50,000 மாணவர்கள் எழுதவில்லை என்ற தகவல் வெளியாகி புயலை கிளப்பியது. பள்ளி படிப்பை நிறுத்திவிட்டு அதிகப்படியான மாணவர்கள் டிப்ளமோ படிப்பை தேர்வு செய்துள்ளதாகவும் தெரியவந்தது.


இதனிடையே பிளஸ் 1 பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என ஆசிரியர் சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.


 இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகாத நிலையில், இந்த விவகாரம் குறித்து புதிய கல்விக்கொள்கை குறித்த கூட்டத்திலும் ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்த உள்ளதாக தெரிவித்துள்ளன. 


இதன் தொடர்ச்சியாக மாணவர்களின் நலன் கருதி 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வது தொடர்பாக விரைவில் அறிவிப்பு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments

Popular posts from this blog