முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமன விவகாரம் ஆசிரியர் தேர்வாணைய தலைவர் ஆஜராக உத்தரவு




முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமன விவகாரத்தில், ஆசிரியர் தேர்வாணைய தலைவர் ஆஜராக ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.



தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தின் சார்பில் 387 முதுகலை பட்டதாரி ஆசிரியர் (வேதியியல்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு 2017ல் வெளியிடப்பட்டது. 


இதற்கான தேர்வில் தவறான வினா-விடை இடம் பெற்றதாக சிலர், கடந்த 2017ல் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தனர். இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, தவறாக கேட்கப்பட்ட வினா எண் 14, 43, 63 மற்றும் 72 ஆகியவற்றிற்கு தலா ஒரு மதிப்பெண் வழங்க உத்தரவிட்டார். 


இதை எதிர்த்து, டிஆர்பி தரப்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் அப்பீல் செய்யப்பட்டது. இதில், சம்பந்தப்பட்ட தேர்வெழுதியவர்களின் கோரிக்கையை பரிசீலித்து சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க அனுமதித்து பணி வழங்க உத்தரவிடப்பட்டது.


இதனிடையே, இதே விவகாரத்தில் தாரணி என்பவர் தாக்கல் செய்த மனுவை பரிசீலிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டிருந்தது. ஆனால், அவரது கோரிக்கை ஏற்கப்படவில்லை. இதனால், தாரணி தரப்பில் சீராய்வு மனு செய்யப்பட்டிருந்தது.


 இதை விசாரித்த நீதிமன்றம், இதுதொடர்பான முந்தைய உத்தரவு மனுதாரருக்கும் பொருந்தும் என உத்தரவிட்டிருந்தது. ஆனால், நீதிமன்ற உத்தரவை ஏற்று தனக்கு இன்னும் பணி வழங்காத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்யப்பட்டது.


 இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர், ஆசிரியர் தேர்வாணைய தலைவர் மற்றும் பள்ளிகல்வித் துறை செயலர் ஆகியோர் ஆஜராக உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

Comments

Popular posts from this blog