டிஎன்பிஎஸ்சி தலைவராகும் சைலேந்திரபாபு..இறையன்பு ஐஏஎஸ்க்கு காத்திருக்கும் புதிய பதவி




தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக உள்ள சைலேந்திர பாபு சில தினங்களில் ஓய்வு பெற உள்ள நிலையில் டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.


அதே நேரத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு ஓய்வு பெற்றாலும் அவருக்கு கவுரமான பொறுப்பு கொடுத்து தனது பக்கத்திலேயே வைத்துக்கொள்ள முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டிருப்பதாக கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.


தமிழ்நாட்டின் அரசுத் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களை டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நியமினம் செய்து வருகிறது.


 ஆண்டுதோறும் தேர்வுகள் நடத்தப்பட்டு, ஆட்களைத் தேர்வு செய்வது டிஎன்பிஎஸ்சியின் முக்கியப் பணியாகும். டிஎன்பிஎஸ்சி 1 தலைவர் மற்றும் 13 உறுப்பினர்களைக் கொண்ட ஓர் அமைப்பு. இதில் தற்போது தலைவர் பணியிடம் காலியாக, நிரப்பப்படாமல் உள்ளாது.


 எனினும் டிஎன்பிஎஸ்சியில் தற்போது 2 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். உறுப்பினர்களில் ஒருவரான முனியநாதன் பொறுப்பு தலைவராகப் பணியாற்றி வருகிறார்.


டிஎன்பிஎஸ்சிக்கு நிரந்தரமாக தலைவர் யாரும் இதுவரை நியமிக்கப்படவில்லை. இதனால் தேர்வுகள், தேர்வு முடிவுகள் வெளியீடு உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. 


இந்த நிலையில், தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக உள்ள சைலேந்திர பாபு வரும் 30ஆம் தேதி ஓய்வுபெற உள்ளார். அவரை டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்க அரசு திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 


62 வயது வரை டிஎன்பிஎஸ்சி அமைப்பில் தலைவராகவோ, உறுப்பினராகவோ பதவி வகிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


இதனிடையே தமிழ்நாடு தலைமை செயலாளராக பணியாற்றி வரும் இறையன்புவின் பணிக்காலம் வரும் 30ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அவருக்குப் பிறகு அடுத்த தலைமை செயலாளர் யார்? என்ற எதிர்பார்ப்பு ஒருபக்கம் இருந்தாலும், இறையன்புவுக்கு வேறு ஏதேனும் பொறுப்பு வழங்கப்படுமா? என்பது குறித்து பல்வேறு யூகங்கள் வெளியாகின.


 தகவல் ஆணையர், டிஎன்பிஎஸ்சி தலைவர் ஆகிய பதவிகளில் நியமிக்கப்படலாம் என்ற தகவல் கசிந்தன. ஆனால் அவற்றை எல்லாம் ஏற்க மறுத்து விட்டாராம் இறையன்பு ஐஏஎஸ். 


இந்த நிலையில் தனது ஆலோசகராக கவுரவமான பதவியில் தனது பக்கத்திலேயே இறையன்புவை வைத்துக்கொள்ள முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Comments

Popular posts from this blog