TN TRB BEO Notification: வட்டார கல்வி அலுவலர் தேர்வு: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு..




பள்ளிக் கல்வித்துறையில் வட்டாரக் கல்வி அலுவலர் பணிக்கு நேரடி முறையில் ஆட்கள் தேர்வு செய்ய நடத்தப்படும் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் ஜூலை 12ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.



தமிழ்நாட்டில் அரசுக் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கான ஆசிரியர் பணிக்கு, போட்டித் தேர்வுகள் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்தத் தேர்வுகளை டிஆர்பி எனப்படும் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துகிறது. 


முன்னதாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட 2023-ஆம் ஆண்டுக்கான ஆண்டு அட்டவணையில், தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கும், அரசு கல்வியியல் கல்லூரிகளுக்கும் 4000 உதவிப் பேராசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிக்கை ஜனவரி மாதம் வெளியிடப்படும்; வட்டாரக் கல்வி அலுவலர்கள் 23 பேரை தேர்ந்தெடுப்பதற்கான அறிக்கை பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப் பட்டிருந்தது.


தாமதமான அறிவிப்பு


அதேபோல 6,553 இடைநிலை ஆசிரியர்களை தேர்ந்தெடுக்கும் அறிக்கை மார்ச் மாதமும் வெளியிடப்படும். பட்டதாரி ஆசிரியர்கள் 3,587 பேரை தேர்ந்தெடுப்பதற்கான அறிக்கை ஏப்ரல் மாதமும், பாலிடெக்னிக் கல்லூரிகளில் 493 விரிவுரையாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிக்கை மே மாதமும் வெளியிடப்படும் என்று அறிவிப்பு வெளியாகி இருந்தது.


மே மாதம் முடிந்து ஜூன் தொடங்கிய பிறகும், எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால், ஆசிரியர் தேர்வு வாரியம் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. தலைவர் பதவிக்கு யாரும் நிரப்படாததும் முக்கியக் காரணமாகக் கூறப்பட்டது. 


செப்டம்பர் 10ஆம் தேதி தேர்வு


இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் உள்ள 33 வட்டார கல்வி அலுவலர் பணிக்கான நேரடித் தேர்வுக்கு ஜூன் 5ஆம் தேதி முதல் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. செப்டம்பர் 10ஆம் தேதி இதற்கான தேர்வு நடைபெற உள்ளது.


இதைத் தொடர்ந்து தேர்வர்கள்https://www.trb.tn.gov.in/ என்ற இணைய முகவரியை க்ளிக் செய்து, வட்டார கல்வி அலுவலர் பணிக்கான தேர்வுக்கு விண்ணப்பித்து வருகின்றனர். நேரடி நியமனமாக உள்ள இந்தத் தேர்வுக்கு தேர்வர்கள் ஜூலை 5ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர்கள் தேர்வு வாரியம் அறிவித்து இருந்தது. இந்த நிலையில், தேர்வர்கள் ஜூலை 12ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.


Comments

Popular posts from this blog