நாடு முழுவதும் சுமார் 10லட்சம் ஆசிரியர் பணியிடங்கள் காலி! நாடாளுமன்ற நிலைக்குழு தகவல்.




நாடு முழுவதும் சுமார் 10 லட்சம் ( 9,86,585) ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், அதை உடனே நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்தியஅரசுக்கு நாடாளுமன்ற நிலைக்குழு தகவல் அறிவுறுத்தி உள்ளது.


நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20ந்தேதி தொடங்கி ஆகஸ்டு கடந்த 11 ஆம் தேதி முடிவடைந்தது. இந்த தொடரின்போது, மணிப்பூர் விவகாரத்தை எழுப்பி, நாடாளுமன்ற இரு அவைகளையும் முடக்கிய எதிர்க்கட்சிகள், மத்திய பாஜக அரசுமீது நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் கொண்டு வந்தது. இந்த தீர்மானத்திற்கு பிரதமர் மோடி பதில் அளித்தபோது, எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறின.


இந்த கூட்டத்தொடரில், கல்வி, மகளிர், இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறைகள் தொடர்பாக, பாஜக எம்.பி.யான விவேக் தாக்கூர் தலைமையிலான நிலைக்குழு ஒரு முக்கியமான அறிக்கையை சமர்ப்பித்திருந்தது. அதில், 2022-23 கல்வியாண்டில் நாடு முழுவதிலும் உள்ள அரசுப் பள்ளிகளில் மொத்தம் உள்ள ஆசிரியர் பணியிடங்கள் 62,72,380. இவற்றில் 9,86,585 பணியிடங்கள் பல்வேறு காரணங்களால் காலியாகி நிரப்பப்படாமல் உள்ளன.


இவற்றில், 7,47,565 துவக்கப்பள்ளிகளிலும், உயர்நிலைப்பள்ளிகளில் 1,46,334 மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 92,666 பணியிடங்களும் காலியாக இடம் பெற்றுள்ளன. கல்வி என்பது மத்திய, மாநில அரசுகளின் பொதுப்பட்டியலில் உள்ளது. எனவே, காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் கடமை என மத்திய அரசு கூறியிருந்த நிலையில், ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்பக் கூறி அனைத்து மாநில அரசுகளிடமும் மத்திய அரசு பேச வேண்டும் என நிலைக்குழு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது


காலியாக உள்ள ஆசிரியர் நிரப்பினால்தான் மத்திய அரசு தனது புதிய கல்விக் கொள்கையின்படி 30 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் எனும் சதவிகிதத்தை விரைந்து அமலாக்க முடியும் என அறிவுறுத்தி உள்ளதுடன், இந்த ஆசிரியர் பணியிடங்கள் பெரும்பாலான மாநிலங்களில் வெளிப்படையாக இல்லை. இதை சரிசெய்ய, ஆசிரியர்களை முறையாக தேர்வு செய்து நியமிக்க தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்புகளை மாநில அரசுகள் அமைக்க வேண்டும் எனப் பதிவு செய்துள்ளது.

Comments

Popular posts from this blog