தமிழ்நாட்டில் 1753 பள்ளி ஆசிரியர் பணி இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது! நாடாளுமன்றத்தில் தகவல்.




தமிழ்நாட்டில் இன்னும் 1753 பள்ளி ஆசிரியர் பணி இடங்கள் நிரப்பப்பட வேண்டும் என தமிழ்நாட்டைச் சேர்ந்த விசிக எம்.பி.ரவிக்குமார் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக நாடாளுமன்றத்தில் பதில் அளித்துள்ளது.


நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை 20ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரை எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள், மணிப்பூர் விவகாரத்தை கையில் எடுத்து, முடக்கி வருகின்றன. இதற்கிடையில், உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் எழுத்துப்பூர்வமனா பதில்களை தெரிவித்து வரும் நிலையில், பல்வேறு மசோதாக்களையும் விவாதமின்றி நிறைவேற்றி வருகிறது.


இந்த நிலையில், விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார், நாடாளுமன்றத்தில் '2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு ஒவ்வொரு மாநிலத்திலும் அனுமதிக்கப்பட்ட பள்ளி ஆசிரியர்களின் மொத்த எண்ணிக்கை, அதில் நிரப்படாமல் உள்ள பணியிடங்கள் எத்தனை?, 2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கான 1-8 வகுப்புகளுக்கான மொத்த ஆசிரியர் காலியிடங்களின் எண்ணிக்கை மற்றும் இந்த காலியிடங்களை நிரப்பாததற்கான காரணங்கள் என்ன? குறிப்பாக ஒவ்வொரு மாநிலத்திலும் இணைப்பு /ஒருங்கிணைத்தல்/பகுத்தறிவு ஆகியவற்றின் கீழ் மூடப்பட்ட பள்ளிகளின் மொத்த எண்ணிக்கை மற்றும் அத்தகைய பள்ளிகளைச் சேர்ந்த குழந்தைகள் வேறு பள்ளிகளில் சேர்க்கப்படுகிறார்களா? பாதிக்கப்பட்ட குழந்தைகள் கல்வியைத் தொடர அரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன என்பது உள்பட பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார்.


இதற்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ள கல்வித்துறை இணை அமைச்சர் அன்னபூர்ணாதேவி,. 2023 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் ஒப்பளிக்கப்பட்ட மொத்த ஆசிரியர் பணி இடங்கள் 1,44,968 எனவும் அதில் 143215 நிரப்பப்பட்டவை எனவும்; 1753 இடங்கள் இன்னும் நிரப்பப்பட வேண்டியவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், பாஜக ஆளும் குஜராத்தில் 19,963; மத்தியபிரதேசத்தில் 69,667; உத்தரப்பிரதேசத்தில் 1,26,028 இடங்களும் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. முன்பு பாஜக கூட்டணி ஆட்சி செய்த பீகாரில் நாட்டிலேயே அதிகபட்சமாக 1,87,209 ஆசிரியர் பணி இடங்கள் நிரப்பப்படவில்லை. பாஜக கூட்டணி ஆட்சி நடக்கும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 949 இடங்கள் காலியாக உள்ளன.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog