டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக்கு சைலேந்திர பாபுவை பரிந்துரைத்த தமிழக அரசு.. கிடப்பில் போட்ட ஆளுநர்





தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் தலைவர் பதவிக்கு ஓய்வு பெற்ற டிஜிபி சைலேந்திர பாபுவின் பெயரை தமிழக அரசு பரிந்துரை செய்தும் அதற்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் மாளிகை நிறுத்தி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இருந்தவர் சைலேந்திர பாபு. ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0, ஆபரேஷன் கந்து வட்டி, ஆபரேஷன் மறுவாழ்வு உள்ளிட்ட முன்னெடுப்புகளை எடுத்து சமூகவிரோத கும்பல்களை அதிரடியாக கைது செய்து வந்தார்.


கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஐபிஎஸ் அதிகாரி சைலேந்திர பாபு. 1989 ஆம் ஆண்டு கூடுதல் காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். அவர் 1992 இல் எஸ்பியாக பதவி உயர்வு பெற்றார்.


பின்னர் 2001 இல் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரலாகவும் 2006 ஆம் ஆண்டு இன்ஸ்பெக்டர் ஜெனரல், 2019 ஆம் ஆண்டு ரயில்வே போலீஸ் கூடுதல் இயக்குநர் ஜெனரல் ஆகிய பொறுப்புகளை வகித்தார். கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த போது டிஜிபியாக சைலேந்திர பாபு நியமிக்கப்பட்டார்.


2 ஆண்டுகளாக டிஜிபியாக இருந்த சைலேந்திர பாபுவின் பணிக்காலம் கடந்த ஜூன் 30ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து புதிய டிஜிபியை தேர்ந்தெடுப்பதற்காக ஆலோசனை கூட்டம் நடந்தது. அதன்படி தமிழகத்தின் டிஜிபியாக சங்கர் ஜிவால் தேர்வு செய்யப்பட்டார்.


இந்த நிலையில் கடந்த அதிமுக ஆட்சியில் தமிழக டிஜிபியாக இருந்த நடராஜ் ஓய்வுக்கு பிறகு டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்கப்பட்டார். அந்த வகையில் தற்போது காலியாக உள்ள டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக்கு சைலேந்திர பாபு நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.



அதன்படி தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் தலைவராக சைலேந்திர பாபு, 10 உறுப்பினர்கள் பதவிகளுக்கான பெயர்களை பரிந்துரை செய்து ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழக அரசு அனுப்பியுள்ளது. இந்த பட்டியல் அனுப்பி ஒரு மாத காலமாகியும் ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்துள்ளதா தெரிகிறது.


தமிழக அரசில் காலியாக உள்ள பணி நியமனங்களை விரைந்து மேற்கொள்ள டிஎன்பிஎஸ்சி தலைவர் மற்றும் உறுப்பினர் பணியிடங்களை நிரப்ப வேண்டியது அவசியம். 


இந்த நிலையில் தமிழக அரசின் பரிந்துரைக்கு ஆளுநர்ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்துள்ளதாக கூறுகிறார்கள். மேலும் ஆளுநர் கேட்ட விளக்கங்களுக்கு பதில் அளித்த பிறகும் ஒப்புதல் அளிக்கவில்லை என தெரிகிறது.

Comments

Popular posts from this blog