கூடுதல் பணியால் கற்பித்தல் பணி பாதிப்பு:அரசு பள்ளி ஆசிரியர்கள் புலம்பல்





கடலுார் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் 'எமிஸ்' இணையதளத்தில் கூடுதல் விவரங்களை ஆசிரியர்கள் தினசரி பதிவேற்றம் செய்வதால் கற்றல் திறன் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.கடலுார் மாவட்டத்தில் கடலுார், விருத்தாசலம் என, இரண்டு கல்வி மாவட்டங்கள் உள்ளது.


மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் துவக்கம், நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 1,711 ஆகும்.தற்போதைய கல்விச் சூழலில், கற்பித்தல் பணி மட்டுமல்லாமல், பல்வேறு கூடுதல் பணிகளை மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு ஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக, மாணவர்களின் வருகை பதிவேடு, அறிவியல் மன்றங்களின் செயல்பாடுகள், அரசின் நலத்திட்ட உதவிகள், கல்வி உதவித் தொகை சார்ந்த பணிகளை பள்ளி மேலாண்மை தகவல் அமைப்பு எனும் 'எமிஸ்' இணையதளத்தில் தினசரி பதிவேற்றம் செய்கின்றனர்.இதனால், கூடுதல் பணிச்சுமை ஏற்படுவது மட்டுமின்றி மாணவர்களுக்கான கற்றல் திறனும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில், 'கடந்த கல்வியாண்டுகளில் வழக்கமான பணிகளை மட்டுமே 'எமிஸ்' இணையதளத்தில் பதிவேற்றம் செய்தோம். ஆனால், வழக்கத்திற்கு மாறாக இந்தாண்டு வழக்கமான பணிகளுடன் சேர்ந்து அறிவியல் மன்றங்களின் செயல்பாடு, பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம், பதிவேடு பராமரித்தல், மாணவர்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்குதல் என பல்வேறு பணிகளின் விவரங்களை அடிக்கடி பதிவேற்றம் செய்யுமாறு அறிவுறுத்துவதால் அதற்கான பணிகளை மேற்கொள்ளவே நேரம் சரியாக உள்ளது.பதிவேற்றம் செய்ய தாமதம் ஏற்பட்டால் கல்வித்துறை அதிகாரிகள் மொபைல் மூலமாக தொடர்பு கொண்டு குறிப்பிட்ட நேரத்திற்குள் பதிவு செய்யுமாறு கூறுகின்றனர்.இதனால், வேறு வழியின்றி விவரங்களை பதிவு செய்வதே முதல் பணியாக உள்ளது. போதிய அளவில் நேரம் கிடைக்காததால் கல்விப் பணியில் முழு கவனம் செலுத்த முடியவில்லை. விவரங்களை பதிவேற்றம் செய்வதுதான் முதல் பணிகளாக உள்ளது. இருப்பினும், இப்பணிகளை வட்டார வள மேற்பார்வையாளர்கள் மற்றும் பயிற்றுனர்கள் மூலமாக செயல்படுத்தினால் மாணவர்களுக்கான கற்றல் திறன் பணியில் பாதிப்பு ஏற்படாது' என்றனர்.

Comments

Popular posts from this blog