15 ஆயிரம் பணியிடங்கள் டிசம்பர் 15-ல் அறிவிப்பு வெளியிடும் டிஎன்பிஎஸ்சி




தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 15 ஆயிரம் காலி பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வரும் டிசம்பர் 15-ம் தேதி வெளியாக உள்ளது.


இது தொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) 30 வகையான போட்டி தேர்வுகள் குறித்த அறிவிப்பை வெளியிடும்.


தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் (டிஎன்பிஎஸ்சி) பூர்த்தி செய்து வருகிறது.


குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 என பல்வேறு நிலைகளில் உள்ள பணியிடங்கள் அவ்வப்போது அறிவிப்பு வெளியிடப்பட்டு ஆண்டுதோறும் நிரப்பப்படுகின்றன. இந்நிலையில் ஆண்டு தேர்வு கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் வெளியிட்டு வருகிறது.


 


தமிழ்நாட்டில் அரசுத்துறைகளில் உள்ள அனைத்து வகையான பணியிடங்களுக்கும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி.) தேர்வுகளை சீரிய முறையில் நடத்தி தகுதியானவர்களை நியமித்து வருகிறது. இதன்படி ஆண்டு தோறும் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு துறைகளின் செயலாளர்களிடம் இருந்து காலிப்பணியிட விவரங்கள் பெறப்பட்டு வருகின்றன, அதற்கேற்றபடி ஆண்டு அட்டவணை வெளியிட்டு, தேர்வுகள் நடத்தி ஆட்கள் பணியிடங்களில் நிரப்ப படுவார்கள்


அந்த வகையில் 2023-24-ம் ஆண்டில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்த விவரங்களை பட்டியலிட வேண்டும் என சமீபத்தில் நடந்த துறைசார்ந்த செயலாளர்கள் கூட்டத்தில் மனிதவள மேம்பாட்டுத் துறை சார்பாக முன்வைக்கப்பட்டு உள்ளது.


அதன்படி, மனிதவள மேலாண்மைத்துறை சார்பில் அனைத்து துறைசார்ந்த செயலாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் , அனைத்து அரசு துறை செயலாளர்களும் நேரடி ஆட்சேர்ப்பின் கீழ் உள்ள பதவிகளுக்கான காலிப் பணியிடங்கள் விவரங்களை அனுப்பும் செயல் முறையை விரைவுபடுத்த வேண்டும்.


 மேலும் 2023-24-ம் ஆண்டு வரையில் குரூப்-2, 2ஏ, 4 ஆகிய பணியிடங்களுக்கான காலியிடங்கள் குறித்த விவரங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு விரைவில் அனுப்ப வேண்டும் என முறையாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், அரசு துறைகளில் காலிப்பணியிடங்கள் குறித்த விவரங்களை மனிதவள மேலாண்மைத்துறைக்கும் வருகிற 27-ம் தேதிக்குள் அனுப்பி வைக்கவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.


இதைத் தொடர்ந்து. தமிழ்நாட்டில் குரூப் 4 தேர்வு பணியிடங்கள் நிரப்புவது குறித்து அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.


இதன் அடிப்படையில் அடுத்த ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை வரும் டிசம்பர் 15-ம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


15 ஆயிரம் பணியிடங்களுக்கான அறிவிப்பை அப்போது டிஎன்பிஎஸ்சி வெளியிடும் எனக் கூறப்படுகிறது. அப்போது 30 வகையான போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தமிழ்நாட்டில் குரூப் 4 தேர்வு பணியிடங்களில் 10 ஆயிரம் ஒவ்வொரு ஆண்டும் ஓய்வு பெறுகின்றனர். அதே எண்ணிகையில் காலியாகும் பணிகளை நிரப்ப வேண்டும் என்றால் ஆண்டுக்கு 10,000 குரூப் 4 பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது அவசியமாகிறது.


ஆனால், 2012-ஆம் ஆண்டு அறிவிக்கையின்படி 10,718, 2017-ஆம் ஆண்டு அறிவிக்கையின்படி 9,351, 2019-ஆம் ஆண்டு அறிக்கையின்படி 9,398, 2022ம் ஆண்டு அறிவிக்கையின் படி 10,117 என கடந்த 12 ஆண்டுகளில் 40 ஆயிரத்திற்கும் குறைவான குரூப் 4 பணியாளர்கள் மட்டும் தான் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் வரும் ஆண்டில் கூடுதல் பணியாளர்கள் நிரப்பப்படலாம் என்ற எதிர்பார்ப்பு பொது மக்களிடையே நிலவுகிறது.


சுமார் 15 ஆயிரம் காலி அரசு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் இளைஞர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.

Comments

Popular posts from this blog