வினாத்தாளை பார்த்து ஷாக் ஆன தேர்வர்கள்.. சிவில் நீதிபதி தேர்வில் குளறுபடியா? டிஎன்பிஎஸ்சி விளக்கம்!




தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற்று வரும் சிவில் நீதிபதி பணிக்கான தேர்வில் குளறுபடி ஏற்பட்டுள்ள விவகாரத்தில் டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது.


தமிழ்நாட்டில் கீழமை நீதிமன்றங்களில் உள்ள உரிமையியல் நீதிபதி காலிப் பணியிடங்கள், 2014ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. டிஎன்பிஎஸ்சி எழுத்துத் தேர்வை நடத்தினாலும், நேர்முகத் தேர்வு, கலந்தாய்வு பணிகளில் உயர் நீதிமன்றம் பங்களித்து வருகிறது.


சிவில் நீதிபதி பதவிக்கான 245 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஜூன் 1ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் வெளியிட்டது. இந்த தேர்வை எழுத 12,037 பட்டதாரிகள் விண்ணப்பித்தனர். முதல் நிலைத் தேர்வு, தமிழகம் முழுவதும் 32 மையங்களில் கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி நடைபெற்றது. இதன் முடிவுகள் அக்டோபர் 11ஆம் தேதி வெளியாகின.


இதில் 2,544 பேர் அடுத்த கட்ட முதன்மைத் தேர்வு எழுத தகுதி பெற்றனர். இதையடுத்து, சென்னையில் உள்ள 25 மையங்களில் முதன்மைத் தேர்வு நேற்றும் இன்றும் நடைபெற்று வருகிறது. நேற்ற்ய் காலையில் மொழிபெயர்ப்பு தாள் தேர்வும், மதியம் சட்டம் முதல் தாள் தேர்வும் நடத்தப்பட்டது. இன்று காலையில் சட்டம் 2ஆம் தாள் தேர்வு அதாவது சிவில் வழக்குகளில் தீர்ப்பு எழுதும் தேர்வும், மதியம் சட்டம் 3ஆம் தாள் தேர்வு, அதாவது கிரிமினல் வழக்குகளில் தீர்ப்பு எழுதும் தேர்வும் நடக்கிறது.


இந்த தேர்வில் வெற்றி பெறுபவர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் இறுதி செய்யப்பட்டு பின்னர் பணி வாய்ப்பு வழங்கப்படும். இந்நிலையில், இன்று காலை நடைபெற்ற சட்டம் 2ஆம் தாள் (சிவில் வழக்கு தீர்ப்பு) தேர்வின்போது, வழங்கப்பட்ட கேள்வித்தாளில், கிரிமினல் வழக்குகளில் தீர்ப்பு எழுதுவது தொடர்பான கேள்விகள் இடம்பெற்றதல் தேர்வர்களிடையே குழப்பம் ஏற்பட்டது.


இந்நிலையில், இதற்கு டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது. "சிவில் நீதிபதி பணியிடங்களுக்கான இந்த தேர்வு சென்னை உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படியே நடக்கிறது. அவர்கள் தயார் செய்த கேள்வித்தாள்களை தான் எங்களிடம் கொடுத்தார்கள். நாங்கள் அதை தேர்வர்களுக்கு விநியோகம் செய்தோம். இதில் எங்களுடைய தவறு எதுவும் இல்லை.


எனினும், தேர்வர்களின் புகார் குறித்து உடனடியாக ஐகோர்ட் பதிவாளரிடம் தெரிவிக்கப்பட்டது. வினாத்தாளில் குளறுபடிகள் எதுவும் இல்லை என்றும், தொடர்ந்து தேர்வை நடத்தலாம் என்றும் பதிவாளர் தெரிவித்துள்ளார்." என டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, தொடர்ந்து இன்று மதியம் சட்டம் 3ஆம் தாள் தேர்வு நடைபெற உள்ளது.


Comments

Popular posts from this blog