விழுப்புரம் மாவட்டத்தில் காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வு எழுதியோர் 9,398 பேர்; 1411 பேர் ஆப்சென்ட்; மையத்தில் ஐ.ஜி., ஆய்வு




விழுப்புரம் மாவட்டத்தில், 7 மையங்களில் நடந்த காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வில் 9,398 பேர் தேர்வு எழுதினர்.



வடக்கு மண்டல ஐ.ஜி., கண்ணன் நேரில் ஆய்வு செய்தார்.தமிழகத்தில் சீருடை பணியாளர்கள் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும், இரண்டாம் நிலை காவலர்கள் (ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை) மற்றும் சிறைக் காவலர்கள், தீயணைப்பாளர் பதவிகளுக்கான நேரடி தேர்வு நேற்று நடந்தது.


காலியாக உள்ள ஆயுதப்படை காவலர்கள் 2,599, தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவலர்கள் 86, சிறைக் காவலர்கள் 674 இடங்கள் என, மொத்தம் 3,359 காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு மாநிலம் முழுதும் நேற்று நடத்தப்பட்டது.


விழுப்புரம் மாவட்டத்தில், எஸ்.பி., சசாங்சாய் தலைமையிலான தேர்வுக் குழுவினர் தேர்வு பணிகளுக்கு ஏற்பாடு செய்தனர். ஏ.டி.எஸ்.பி.,க்கள் ஸ்ரீதர், தேவராஜ் மற்றும் 6 டி.எஸ்.பி.,க்கள் முதல் காவலர்கள் வரை 1,150 பேர் பணியில் ஈடுபட்டனர்.


மாவட்டத்தில், விழுப்புரம் ஏழுமலை பாலிடெக்னிக் கல்லுாரி, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, அரசு சட்டக் கல்லுாரி, சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, அரசூர் வி.ஆர்.எஸ்., பொறியியல் கல்லுாரி, ராமகிருஷ்ணா வித்யாலயா மேல்நிலைப்பள்ளி, வி.ஆர்.பி., மேல்நிலைப் பள்ளி ஆகிய 7 தேர்வு மையங்களில், எழுத்து தேர்வு நடந்தது. 


தேர்வுக்கு விண்ணப்பித்த 10 ஆயிரத்து 809 பேர் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டது.தேர்வு மையங்களில், தேர்வாளர்கள் காலை 8:00 மணி முதல் அனுமதிக்கப்பட்டனர். தேர்வு அனுமதி சீட்டு, பால்பாயிண்ட் பேனா, அடையாள அட்டையுடன் மட்டுமே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.


போலீஸ் குழுவினர், தேர்வர்களை முழுதுமாக சோதனை செய்து தேர்வு மையத்திற்குள் அனுமதித்தனர்.மொபலை போன், ஸ்மார்ட்வாட்ச், கால்குலேட்டர், பென்சில், பேக் மற்றும் எலெக்ரானிக் பொருட்கள் போன்றவற்றை மையத்தின் வாயிலிலேயே வாங்கி வைத்துக்கொண்டனர்.


தேர்வில், 6,860 ஆண்கள், 2,538 பெண்கள் என மொத்தம் 9,398 பேர் தேர்வு எழுதினர். 1411 பேர் (1035 ஆண்கள், 376 பெண்கள்) தேர்வுக்கு வராமல் ஆப்சென்ட் ஆகினர். காலை 10:00 தேர்வு துவங்கி, பிற்பகல் 12:30 மணி வரை நடந்தது. முதலில் பொது தமிழ் தகுதித் தேர்வும், பிறகு ஜி.கே., எழுத்துத் தேர்வும் நடந்தது.


வடக்கு மண்டல ஐ.ஜி., கண்ணன், விழுப்புரம் சரஸ்வதி மெட்ரிக் பள்ளி மையத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மையத்தில் அடிப்படை வசதிகள், பாதுகாப்பு பணிகளை அவர் பார்வையிட்டு சென்றார். எஸ்.பி., சசாங்சாய் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Comments

Popular posts from this blog