ஓட்டுநருடன் நடத்துநர் பணி... டிசம்பர் 26ம் தேதி முதல் செய்முறை தேர்வு!




தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநருடன் நடத்துநர் பதவிக்கான செய்முறை தேர்வு வரும் 26ம் தேதி முதல் நடைபெற இருப்பதாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநருடன் நடத்துநர் பதவிக்கான 685 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு கடந்த நவ.19ம் தேதி நடந்தது. வேலைவாய்ப்பு அலுவலகம் பரிந்துரைத்த மற்றும் இணையதளம் மூலம் விண்ணப்பித்தவர்களில் தகுதி பெற்ற 11,117 பேருக்கு சாலை போக்குவரத்து நிறுவனம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் இணைந்து எழுத்துத் தேர்வை நடத்தியது.


10 மாவட்டங்களில் நடந்த தேர்வில் 9,352 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் தேர்வில் பெற்ற மதிப்பெண் கடந்த நவ.27ம் தேதி வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு, ஓட்டுநர் செயல்முறை தேர்வுக்காக அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அவர்களுக்கு வரும் 26ம் தேதி முதல் செயல்முறை தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்துக் கழக அதிகாரிகள், வெளிப்படைத் தன்மையுடன் தேர்வு நடத்த வேண்டும் என நீதிமன்ற உத்தரவு இருப்பதால் தேர்வுக்கான பணிகள் தாமதமாகின்றன.


 தினமும் குறைவான அளவிலேயே செயல்முறை தேர்வுக்கு அழைப்பு விடுக்க திட்டமிட்டுள்ளோம். சென்னை குரோம்பேட்டை, கும்மிடிப்பூண்டி, திருச்சியில் உள்ள சாலை போக்குவரத்து நிறுவனங்கள் என 3 இடங்களில் தேர்வு நடத்தப்பட உள்ளது. 


பிப்ரவரி மாதத்தில் நேர்முகத் தேர்வு நடத்தப்படும். மார்ச் மாதத்திற்குள் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

Comments

Popular posts from this blog